

முதற்கட்டத்திலேயே கரோனா தடுப்புப்பணியைத் தொடங்கியதால் தமிழகத்தில் அதன் பாதிப்பு வெகுவாய் குறைக்கப்பட்டது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசினார்.
தேனியில் கரோனா வைரஸ் தடுப்புப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் ம.பல்லவிபல்தேவ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கரோனா நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பின்பு கூட்டத்தில் பேசியதாவது:
கரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பிக்கும் முன்பே மத்திய, மாநில அரசுகளின் தகவலின் அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் மற்ற மாவட்டங்களை விட தேனி சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
தேனிக்கு அருகிலேயே கேரளா உள்ளது. இந்தியாவிலே கரோனா வைரஸ் வேகமாகப் பரவும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் கேரளா உள்ளது. அங்கிருந்து ஏராளமானோர் தேனி மாவட்டத்திற்கு வந்து சென்ற நிலையில் மிக எச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வளர்ச்சிஅடைந்த நாடுகளே இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
இந்த நேரத்தில் நம்மையும் தற்காத்துக் கொள்வதோடு மனித குலத்தின் எதிர்காலத்தையும் காப்பாற்றும் பொறுப்பு நமக்குண்டு. முதற்கட்டத்திலேயே தடுப்புப்பணி ஆரம்பித்துவிட்டோம். இதனால் தமிழகத்தில் இதன் பாதிப்பு வெகுவாய் குறைக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் இதே அர்ப்பணிப்பு உணர்வோடு தொடர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர்கள் மகாராஜன், சரவணக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.