

சமூக இடைவெளியைப் பின்பற்றாததால் உக்கடம் மீன் மார்க்கெட்டை மூட கோவை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
கோவை உக்கடம் செல்வபுரம் பைபாஸ் சாலையில் மாநகராட்சி மீன் மார்க்கெட் வளாகம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள், சிறு வியாபாரிகள் இங்கு மீன் வாங்க திரண்டு வருவர். அதன்படி, இந்த மார்க்கெட்டுக்கு ஞாயிற்றுக்கிழமையான நேற்று (மார்ச் 29) மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்க முறையாக 1 மீட்டர் தூர சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸார், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் முறையான இடைவெளியைப் பின்பற்றுமாறு வலியுறுத்தினர். இதற்கிடையே, முறையான சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால் இந்த மார்க்கெட்டில் உள்ள கடைகளை மூட வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று (மார்ச் 30) வலியுறுத்தினர்.
இதையடுத்து, உக்கடம் செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள மீன் மார்க்கெட் இன்று முதல் மூடப்பட்டுள்ளது என மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
மேலும், உக்கடம் ராமர் கோயில் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட், உக்கடம் தியாகி குமரன் காய்கறி மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டன.