அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கை ஏற்பு: சசிபெருமாள் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் - உண்ணாவிரதத்தை கைவிட குடும்பத்தினர் முடிவு

அரசியல் கட்சி தலைவர்களின் கோரிக்கை ஏற்பு: சசிபெருமாள் உடல் சொந்த ஊரில் இன்று அடக்கம் - உண்ணாவிரதத்தை கைவிட குடும்பத்தினர் முடிவு
Updated on
2 min read

“அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று எனது தந்தை சசிபெருமாளின் உடலை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள் ளோம். இன்று (7-ம் தேதி) மாலை 6 மணிக்கு அவரது உடலை சேலத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுவோம்” என்று சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக் கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட காந்திய வாதி சசிபெருமாள் உயிரிழந்தார்.

அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் மட்டுமே உடலை வாங்குவோம் எனக் கூறி சசிபெருமாளின் குடும்பத்தினர் உடலை வாங்க மறுத்துவிட்டனர்.

இதற்கிடையில் அவரது உடலை பெற்றுக்கொள்ளக் கோரி சசிபெருமாளின் மனைவி மற்றும் மகன்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை இடங்கணசாலை மேட்டுக்காட்டில், சசிபெருமாளின் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தனர்.

தலைவர்கள் வேண்டுகோள்

சசிபெருமாளின் குடும்பத் தினருக்கு ஆறுதல் கூற நேற்று மதியம் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமீம் அன்சாரி ஆகியோர் மேட்டுக்காடு வந்தனர்.

சசிபெருமாளின் மகன் விவேக்கை சந்தித்து ஆறுதல் கூறிய வைகோ உள்ளிட்ட தலைவர்கள் சசிபெருமாளின் உடலை பெற்று அடக்கம் செய்யு மாறும், உண்ணாவிரதத்தை கைவிடும்படியும் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து சசிபெருமாளின் உடலைப் பெற அவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நாகர்கோவிலில் இருந்து அவரது உடல் இன்று காலை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது.

சசிபெருமாளின் மகன் விவேக் கூறியதாவது:

அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் கோரிக் கையை ஏற்று, எனது தந்தை சசிபெருமாளின் உடலை பெற்றுக் கொண்டு, இன்று (7-ம் தேதி) மாலை 6 மணிக்கு சேலத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம்.

உடல் அடக்கம் செய்த பின்னர் அனைத்துக் கட்சி தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிர தத்தை நாங்கள் முடித்துக் கொள்வோம். பூரண மதுவிலக்கு போராட்டத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மக்களின் நலனுக்காக மதுவிலக்கு வேண்டும் என போராடி உயிரிழந்த எனது தந்தையின் நல்லடக்க நிகழ்ச்சியில் கட்சி வேறு பாடின்றி அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சசிபெருமாளுக்கு நினைவிடம்

மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பில் சசிபெருமாளுக்கு அவரது சொந்த ஊரில் நினைவிடம் கட்டப்படும் என்று வைகோ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in