

நியாய விலைக்கடைகளில் ஏப்.2 முதல் தினசரி 100 பேருக்கு நிவாரணம் ரூ.1000 வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பராவாமல் தடுப்பது குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆய்வுக்கூட்டம் நடந்தது.
ஆட்சியர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையர் எஸ்.விசாகன், மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், எஸ்.பி.என்.மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது:
தமிழகத்தில் உள்ள 2.04 கோடி ரேஷன் கார்டுகளில் 1.86 கோடி அரிசி கார்டுகளுக்கு நிவாரணம் வரும் ஏப்.2 முதல் ரூ.ஆயிரம் வழங்கப்படும். ஒவ்வொரு நியாயவிலைக்கடையிலும் தினசரி காலையி்ல் 50, மாலையில் 50 பேர் என 100 பேருக்கு நிவாரணம் வழங்கப்படும்.
வெளியூர் சென்றிருப்போருக்கு பின்னர் வழங்கப்படும். ஒவ்வொரு விற்பனைக்கும் 50 பைசா வீதம் விற்பனையாளருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மதுரையில் 2,590 வெளிமாநில பணியாளர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்யப்படுகிறது.
கூட்டத்தை கட்டுப்படுத்த மீன், இறைச்சி கடைகள் பரவலாக்கப்படும். மக்கள் சுயகட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருட்கள் வழங்கப்படுகிறது. தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு உணவுப்பொருட்கள் இருப்பு உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம், சானிடைசர் போதிய அளவு உள்ளன. அத்தியாவசியப் பொருட்கள் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.