

திருநெல்வேலியில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை இன்று வந்தது.
திருநெல்வேலியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் சாலைகளில் தேவையின்றி வாகனங்களில் வருவோர் மீது வழக்கு பதிவு செய்தல், வாகனங்கள் பறிமுதல், தற்காலிக சந்தைகளிலும், கடைகளிலும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் பாதுகாப்பு என்றெல்லாம் பல்வேறு பணிகளில் காவல்துறையினர் ஈடுபடுகிறார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 70 பேர் திருநெல்வேலிக்கு நேற்று வந்தனர்.
திருநெல்வேலி டவுனிலுள்ள தனியார் பள்ளியில் தங்கியிருக்கும் இவர்கள் தேவைக்கேற்ப மாவட்டம் முழுக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சமுதாயப் பரவல் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் முயற்சியில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையைத் தவிர்த்து வெளியில் வருபவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.