

சென்னையில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்றனர். அங்கு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கரை சந்தித்துப் பேசினர்.
அப்போது, இந்த ஆண்டு திருவல்லிக்கேணியில் பெரிய பள்ளிவாசல் அமைந்துள்ள காயிதே மில்லத் நெடுஞ்சாலை வழியாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம் என இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் வேண்டுகோள்விடுத்தனர்.
இதுகுறித்து எஸ்.எம்.பாக்கரிடம் கேட்டபோது, ‘‘இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் எங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியாக இருக்கும் திருவல்லிக்கேணி பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை நடத்துவதன் மூலம் மீண்டும் பதற்றத்தை உருவாக்கிவிட வேண்டாம். எனவே இந்த முயற்சியை தவிர்க்குமாறு அவர்களிடம் கூறினோம்’’ என தெரிவித்தார்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் ஆகியோரையும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்து இதே வேண்டுகோளை விடுத்துள்ளனர்.