

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண்சுந்தர் தயாளன் உள்ளிட்ட அரசுத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் மற்றும் உணவு பொருட்கள் வழங்க ஆனையிட்டுள்ளதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும், தினமும் ஒரு மணிநேரத்திற்கு 20 நபர்கள் வீதம் பாதுகாப்புடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கூட்டுறவுத்துறை வாயிலாக நடமாடும் காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் அடங்கிய அம்மா மினி மார்கெட் தொடங்கபடவுள்ளது என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.எஸ்.எஸ். லட்சுமணன், இன்பதுரை, நாராயணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இதுபோல் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திலும் அமைச்சர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தியவாசியப் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும் சூழலில் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள சுகாதாரத் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் தங்குவதற்க்கு உடனடியாக வசதி செய்து கொடுக்க வேண்டும்.
மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு வருபவர்கள் சமூக பரவல் மூலம் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இடைவெளி விட்டு நிற்பதை உறுதி செய்ய வேண்டும்.
மளிகைக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் விலைப் பட்டியல் வைக்க வேண்டும். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெரிசல் மிகுந்த பகுதிகளில் நடத்தி வரும் கடைகளை நகரில் தகுந்த இடம் பார்த்து திறந்த வெளியில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கிராமங்களிலும் வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்த அனைவரையும் கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும் என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.