

மதுரையில் ‘கரோனா’வுக்கு உயிரிழந்தவர் வசித்த அண்ணாநகர் பகுதியில் அந்த நோய் அறிகுறியிருப்பவர்கள் சிகிச்சைக்காக வீடுகளை விட்டு வெளியேறாமல் அச்சத்துடன் முடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதனால், நேற்று மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் வீடு, வீடாக சென்று வீடுகளில் முடங்கியவர்களை கணக்கெடுத்து அவ்ரகளுக்கு ‘கரோனா’ அறிகுறி எதுவும் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்தனர்.
தமிழகத்தில் இப்போது வரை 50 பேருக்கு ‘கரோனா’ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரையில் 3 பேருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 17 பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டதாக முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் தெரிவித்தார். அதில், மதுரையைச் சேர்ந்த ஒரு நபருக்கும் ‘கரோனா’ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனால், மதுரையில் ‘கரோனா’ நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயிரிழந்தவரை தவிர்த்து 3 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ‘கரோனா’வால் உயிரிழந்தவர், அவரிடம் இருந்து பரவிய அவரது குடும்பத்தினர் வசித்த அண்ணாநகர் பகுதிக்கு போலீஸார் ஏற்கெனவே ‘சீல்’ வைத்து யாரையும் வெளியேயும், உள்ளேயும் அனுமதிப்பதில்லை.
தற்போது அப்பகுதியில் ‘கரோனா’ நோய் அறிகுறி இருப்பவர்கள் சிகிச்சைக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதனால், இன்று முதல் அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் மாநகராட்சிப் பணியாளர்கள் அண்ணா நகர் பகுதியில் வீடு, வீடாக சென்று வீட்டில் இருப்பவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கு யாராவது காய்ச்சல், சளி, சுவாசகோளாறு போன்ற அறிகுறிகள் இருக்கிறதா? என பரிசோதனை செய்தனர்.
மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி அறிகுறி இருப்பவர்களுக்கு ‘கரோனா’ பரிசோதனைக்கு உட்படுத்தவும், அதில் உறுதிசெய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சையும், இல்லாதவர்களுக்கு அவர்களுக்கான மாற்று சிகிச்சையும் அளிக்க ஏற்பாடு செய்வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.