

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் சமூக இடைவெளியைப் பின்பற்றாத மருந்துக் கடைக்கு வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். ஊரடங்கு உத்தரவு முடியும் வரை கடை திறக்க அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இன்றுடன் (மார்ச் 30) ஆறு நாட்கள் ஆகின்றன.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள 'பாவா மெடிக்கல்ஸ்' என்ற தனியார் மருந்துக் கடையில் சமூக இடைவெளி இல்லாமல், கடைக்கு முன்பு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை நிறுத்தி மருந்துகளை வழங்கிக் கொண்டிருந்ததை ரோந்து வந்த அதிகாரிகள் பார்த்தனர்.
மருந்துக் கடை நிர்வாகத்திற்கு பலமுறை அறிவுறுத்தியும் அந்த மருந்துக் கடைக்காரர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறி, இன்று திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் உள்ள மருந்துக் கடையை திருச்செங்கோடு வட்டாட்சியர் கதிர்வேலு மற்றும் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் ஆகியோர் நேரில் சென்று கடைக்கு சீல் வைத்தனர்.
இதுகுறித்து, திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகம் கூறும்போது, "சமூக இடைவெளி விட்டு பொதுமக்களை நிறுத்தி அத்தியாவசியமான பொருட்களை வழங்க வேண்டும் என்று பலமுறை கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தியும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்ததால் 'பாவா மெடிக்கல்ஸ்' மருந்துக் கடையை இன்று சீல் செய்துள்ளோம். இந்த நடவடிக்கை தொடரும்" என்று கூறினார்.