கரோனாவை எதிர்க்க கபசுரக் குடிநீர்!- பாரம்பரிய மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர்

கரோனாவை எதிர்க்க கபசுரக் குடிநீர்!- பாரம்பரிய மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர்
Updated on
1 min read

அலோபதி மருத்துவர்கள் உலகம் முழுவதும் கரோனாவுக்கு எதிராக கடுமையாகப் போராடி வருகிறார்கள். இந்நிலையில், நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு ஆகியவை இந்திய பாரம்பரிய மருத்துவத்தின் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளன.

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பாரம்பரிய மருத்துவமான நிலவேம்புக் குடிநீர் பெரிய அளவில் உதவிகரமாக இருந்ததை அடிப்படையாகக்கொண்டு, கடந்த வெள்ளியன்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது சித்த மருத்துவத்தில் கரோனாவுக்கு மருந்து உள்ளதா என்பதைத் தெரிவிக்கும்படி மாநில அரசைக் கேள்வி கேட்டிருந்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்து நாடெங்கும் உள்ள பாரம்பரிய மருத்துவ நிபுணர்களிடம் காணொலிக் காட்சி மூலம் விவாதித்தார். மத்திய ஆயுஷ் துறை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

ஆயுர்வேத மருத்துவத்தின் மூத்த பேராசிரியர் டெல்லியைச் சேர்ந்த திரிவ்யகுணா, பேராசிரியர் ஹமீது, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் அனுரோக் ஷர்மா, ஹரித்வாரைச் சேர்ந்த ஆச்சார்யா பாலகிருஷ்ணா, பெங்களூருவைச் சேர்ந்த யோகா பேராசிரியர் நாகேந்திரா, கோவை ஆரிய வைத்தியசாலையின் மருத்துவர் கிருஷ்ணகுமார், சென்னை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய டைரக்டர் ஜெனரல் கனகவள்ளி, சித்த மருத்துவர் பேராசிரியர் சிவராமன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

இந்தக் காலகட்டத்தில் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா, ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம் என்றும், ஆனால், அவை ஆராய்ச்சிபூர்வமான சான்றுகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு பிரிவுகள் வாரியாகவும் அவரிடம் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாடு மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சார்பில் மூத்த பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் பிரதமரிடம் உரையாடினார். அப்போது அவர் கபசுரக் குடிநீரை கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து வழங்கலாம் என்று பரிந்துரைத்தார். இந்நோய்க்கு சித்த மருத்துவம் சார்பில் மருத்துவம் பார்க்க அனுமதிக்கவும், மருந்தியல் ரீதியான ஆய்வுக்குரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் அவர் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in