

ஊரடங்கு உத்தரவுக்கு பிறகு தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால் தமிழகத்தில் 4,500 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு குறைந்துள்ளது.
அதனால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லாததால் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சல் பரவுவதால் காவல்துறை, மருத்துவத்துறையுடன் மின்சார துறையும் இணைந்து 24 மணி நேரமும் விழிப்புடன் பணிபுரிய விரிவான ஏற்பாடுகளை மின்வாரியம் செய்துள்ளது.
‘கரோனா’ அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைகளுக்குச் செல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். அதனால், வீடுகளில் மின்சாரம் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இயல்பாகவே கோடைகாலத்தில் மின்சாரம் பயன்பாடு வீடுகளில் அதிகரிக்கும். ஆனால், தற்போது மக்கள் 24 மணி நேரமும் வீடுகளில் இருப்பதால் டிவி, மின்விசிறி, ஏசி, கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களும் பயன்பாட்டில் இருப்பதால் வழக்கத்தை காட்டிலும் வீடுகளில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், பெரிய, சிறிய தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் ஒட்டுமொத்தமாக மின்சார பயன்பாடு தமிழகத்தில் குறைந்துள்ளது.
இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறியதாவது:
தமிழகத்திற்கு ஊரடங்கு உத்தரவுக்கு முன் நாள் ஒன்றுக்கு 14,500 மெகாவாட் மின்தேவை இருந்தது. தடை உத்தரவுக்கு பிறகு 4,500 மெகா வாட் தேவை குறைந்துள்ளது. 10 ஆயிரம் மெகா வாட் மட்டுமே தற்போது தேவையாக உள்ளது.
அதனால், மின்சாரப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இல்லாததால் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் தடையில்லாமல் மின்சாரம் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட ‘கரோனா’ பணியில் இயங்கும் அரசு கட்டிடங்களுக்கு எக்காரணம் கொண்டு மின்தடை ஏற்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
‘கரோனா’ பணியில் மருத்துவத்துறை, காவல்துறையினர் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து மின்சாரவாரியமும், இன்ன பிற அரசு துறைகளும் இணைந்து 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர்.
மின்சாரத்துறை ஊழியர்கள் 24 மணி நேரமும் ‘ஷிஃப்ட்’ முறையில் மின்தடை ஏற்படாமல் விழிப்புடன் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தனிப்பட்ட முறையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அவர்கள் அழைக்கும்பட்சத்தில் உடனடியாக சென்று பழுதுநீக்க வேண்டும். அந்த வீடுகளுக்கு செல்லும் மின்பணியாளர்கள், பாதுகாப்பான முககவசம், கையுறையுடன் செல்ல வேண்டும்.
சென்று வந்தபிறகு கை, கால்களை தண்ணீரை கொண்டு கழுவி சுத்த செய்ய வேண்டும். கைகளை ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து கொண்டிருக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
டிரான்ஸ்பார்மர் பழுது ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்ய தயார்நிலையில் மின்ஊழியர்கள் 24 மணி நேரமும் சுழற்சி பணியில் இருக்க வேண்டும். மின்தடை, மின் பழுது குறைகளை பொதுமக்கள், தொலைபேசி மற்றும் செல்போனில் தெரிவிக்கலாம். நேரடியாக அலுவலகத்திற்கு வரக் கூடாது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.