Published : 30 Mar 2020 12:43 PM
Last Updated : 30 Mar 2020 12:43 PM

அனைத்து முனைகளிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்க; திமுகவினருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

எந்நாளும் மக்களுக்குத் துணையாக இருங்கள் என, திமுகவினரை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 30) எழுதிய கடிதத்தில், "முதலில் சீனாவில் பரவத் தொடங்கி, உலகையே இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது.

வல்லரசு நாடுகளே போகும் திசை தெரியாமல் தினந்தோறும் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க் முடங்கி வெறிச்சோடியிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் ஆழ்ந்த ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் உயிர் பலிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே இருக்கின்றது.

உலகத்தில் ஒற்றை மனிதர்கூட மன நிம்மதியாக இருக்க முடியாதபடி, மிகப்பெரும் அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியான கரோனா வைரஸ்.

இந்தக் கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என 21 நாள் ஊரடங்கினை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன், 5 நாட்கள் ஆகிவிட்டன. நாடு மிகப் பெருமளவு முடங்கியிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடும் முடங்கியிருக்கிறது.

கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு முதல்கட்ட நடவடிக்கை மற்றவர்களிடமிருந்து தனித்திருத்தல்தான் என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் வலியுறுத்திய காரணத்தால்தான், உங்களில் ஒருவனான நான் இதனைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை உடனடியாக ஒத்திவைத்து, மக்கள் பிரதிநிதிகளான சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று, தொகுதி மக்களிடையே இருந்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினையும் தேவைப்படும் இடங்களில் உதவிக்கரம் நீட்டும் பணியினையும் மேற்கொண்டிட வேண்டும் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கடமை உணர்ச்சியோடு எடுத்துரைத்தேன்.

பள்ளி, கல்லூரித் தேர்வுகளை ஒத்தி வைத்திட வேண்டும் என திமுகவின் சார்பில் தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் உடனடியாக அவற்றுக்குச் செவி சாய்க்காவிட்டாலும், பின்னர் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, திமுக வலியுறுத்தியவற்றை ஏற்றுச் செயல்படுத்தினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே முதன்மையானவை என்பதை உணர்ந்திருந்ததால், கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குரிய முகக் கவசம், கை கழுவும் திரவம் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப் பெட்டகத்தை திமுகவின் சார்பில் கொளத்தூர் தொகுதி மக்களுக்கு இலவசமாக வழங்கியதுடன், சட்டப்பேரவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஊடகத்தினருக்கும் அளித்தோம்.

இதனைப் பின்பற்றி மற்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் மருத்துவப் பெட்டகங்களை வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பிரதமர் மோடி மார்ச் 22-ம் தேதி அன்று அறிவித்த மக்கள் ஊரடங்கு, அதன்பிறகு தமிழக அரசு அறிவித்த ஏப்ரல் 1-ம் தேதி வரையிலான 144 தடை உத்தரவு ஆகிய அறிவிப்புகளின்போதே, அதன் அவசியத்தை மனமார வரவேற்றோம். அதே நேரத்தில், அதனால் ஏழை - எளிய சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதையும் நினைவூட்டினோம்.

அமைப்பு சாரா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை மனதில்கொண்டு திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்ற முடிவெடுத்து அறிவித்தோம்.

நாடு முழுவதும் தற்போது கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு குறித்து பிரதமர் தொலைக்காட்சிகளில் உரையாற்றியபோதே அதனை வரவேற்றது திமுக. அத்துடன், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தியது.

ஊரடங்கு நடைமுறைக்கு வந்த நான்காவது நாளில் தலைநகர் டெல்லியிலும் உத்தரப் பிரதேசத்திலும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பசி பட்டினிக் கொடுமையால், கரோனா தொற்று பற்றிக்கூட கவலைப்படாமல் மூட்டை முடிச்சுகளைச் சுமந்துகொண்டு, தங்கள் குடும்பத்தாருடன் கூட்டம் கூட்டமாக நடந்து சென்ற காட்சிகளைக் கண்டபோது, மனம் கலங்கித் தவித்தது.

சொந்த மாநிலத்தை விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காக வந்திருந்த எந்த மாநிலத்து மக்களாக இருந்தாலும் அவர்களுக்கும் நம்மைப் போலத்தானே வயிறு இருக்கிறது என்ற எண்ணமே ஏற்பட்டது. அவர்களின் வாழ்வாதாரம் குறித்து முன்கூட்டியே கவனிக்காத நிலையில், கரோனா பாதிப்பால் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகட்டும், இப்போதைக்குப் பட்டினியால் சாக முடியாது என அவர்கள் பல நூறு கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள தங்கள் ஊரை நோக்கி நடந்தே செல்லத் துணிந்தது, இந்தியாவின் இன்னொரு சோகமான முகத்தை நமக்குக் காட்டியது.

இத்தகைய நிலை ஏற்படக் கூடாது என்பதைத்தான் திமுக தொடர்ந்து வலியுறுத்தியது. சொல்லால் மட்டுமல்ல; செயலாலும்!

சென்னையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்கள் பரிதவிக்கிறார்கள் என்ற செய்தியை அம்மாநிலத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் தெரிவித்தவுடன், திமுக முன்னணியினரிடம் இதனைத் தெரிவித்து, அவர்கள் மூலமாக மேற்கு வங்க தொழிலாளர்களுக்கு உரிய உதவிகள் கிடைத்திடச் செய்தோம்.

அதுபோலவே, திருப்பூரில் பிஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பரிதவிக்கின்ற நிலையை அம்மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டர் மூலம் என்னுடன் பகிர்ந்துகொண்ட நிலையில், உடனடியாக இதனை இளைஞரணிச் செயலாளர் உதயநிதியிடம் தெரிவித்தேன்.

இளைஞரணியின் துணைச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான அன்பில் மகேஷ் மூலமாக, திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் முன்னெடுப்பில் மாவட்ட திமுகவினரும் இளைஞரணியினரும் நேரில் சென்று பிஹார் மாநிலத் தொழிலாளர்கள் 25 பேருக்கு 15 நாட்களுக்கான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்கினர்.

திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் ஊதியத்திலிருந்து நிதி வழங்கி, மக்களைக் காக்கும் பணியில் தங்களின் பங்களிப்பைச் செலுத்தினர். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் என்பதால் திமுகவின் 98 சட்டப்பேரவை உறுப்பினர்களின் சார்பில் 1 கோடியே 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும், மக்களவை உறுப்பினர்கள் 23 பேர் சார்பில் தலா 1 லட்சம் என 23 லட்ச ரூபாயும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளன.

காசோலை வழியாக வழங்குவது இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தனை எளிதானதும் உகந்ததும் அல்ல என்பதால், பெரும்பாலும் இணையச் சேவை மூலமே நிதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒவ்வொரு எம்எல்ஏவும் தலா 25 லட்ச ரூபாய் வரையிலும், எம்பிக்கள் ஐம்பது லட்சம் ரூபாய் முதல் ஐந்து கோடி ரூபாய் வரையிலும் திமுக மக்கள் பிரதிநிதிகளின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காகத் திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.

உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளின் மக்களவை உறுப்பினர்களும் தங்கள் சார்பில் நிதியளித்துள்ளனர். திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்களும் நிதி அளித்துள்ளனர்.

அரசியல் கண்ணோட்டங்களை அகற்றி ஒதுக்கிவைத்து, கரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணியில் திமுக முழு மனதுடன் மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. முன்கூட்டியே ஆலோசனைகளைத் தெரிவிக்கிறது.

தமிழக அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கிட வலியுறுத்துகிறது. மத்திய அரசின் உள்துறை - சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் கவனம் செலுத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பேரிடரான சூழலில், 'தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல' நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது என்கிற அக்கறையுடன், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் காணொலிக் காட்சி வழியாகவேனும் நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டேன்.

பலதரப்பட்ட கருத்துகளுடன், ஒளிவு மறைவின்றி வெளிப்படைத் தன்மையுடன், பல்வேறு பரிமாணங்களையும் ஆராய்ந்து மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த ஒரே நோக்கிலான முயற்சியே இந்தப் பேரிடர் காலத்தைச் சேதாரம் சிறிதும் இன்றிக் கடந்திட உதவிகரமாக இருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளைக் கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட திமுக ஒருபோதும் தயங்கியதில்லை. திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் - உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்போர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கி, அனைத்து முனைகளிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம். மனதிடத்துடன் துணிந்திருப்போம். எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x