

கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது என, அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் நிதியுதவி அறிவித்து வருகின்றன. ஏற்கெனவே, திமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் ஒரு மாதச் சம்பளத்தை நிதியுதவியாக அளிப்பார்கள் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என, திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் இன்று (மார்ச் 30) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக திமுக அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படுகிறது.
மேற்கண்ட நிதி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.