Last Updated : 30 Mar, 2020 10:49 AM

 

Published : 30 Mar 2020 10:49 AM
Last Updated : 30 Mar 2020 10:49 AM

கரோனா ஊரடங்கு வேளையில் துளிர்த்த மனிதநேயம்: பிரசவ வலியால் துடித்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த மதுரை காவலர்

பிரசவ வலியில் துடித்த பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த மதுரை தெப்பக்குளம் காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனின் மனிதநேய செயல் சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் சம்பந்தப்பட்ட காவலரை அழைத்துப் பாராட்டினார்.

மதுரை தேவி நகர் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீமதி மதுரையில் வீட்டில் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இருந்த ஸ்ரீமதி பிரசவ நாளை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் விடுமுறையில் மதுரை வர மணிகண்டன் தயாராக இருந்தார்.

ஆனால், திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், மணிகண்டன் சென்னையிலிருந்து மதுரை வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், திடீரென ஸ்ரீமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஸ்ரீமதி தனது கணவரின் உறவினரான முருகேசனுக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்தார். ஆனால், ஊரடங்கு காரணமாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் கிடைக்கவில்லை.

உடனே முருகேசன் அருகிலிருந்த காவல் சோதனைச் சாவடி மையத்திற்குச் சென்று விவரத்தைக் கூறியுள்ளார். அங்கிருந்த தெப்பக்குளம் காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் உடனடியாக ஊரடங்கை மீறி அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்றார்.

அங்கு வலியால் துடித்த அப்பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மேலும்¸ கார் ஓட்டுநருக்கு டீசல் செலவிற்கு தனது சொந்தப் பணத்தை வழங்கியுள்ளார். இதனையடுத்து சென்னையில் இருக்கும் மணிகண்டனை மதுரைக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்தார்.

உரிய நேரத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x