Published : 05 Aug 2015 08:31 AM
Last Updated : 05 Aug 2015 08:31 AM

பணிக்கு செல்லும் தாய்மார்கள்: தாய்ப்பாலை 24 மணி நேரம் சேமித்து வைத்துக் கொடுக்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை உலக தாய்ப்பால் ஊட்டும் வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் இந்த ஆண்டுக்கான கருத்து பணி செய்யும் பெண்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சவால்களை சமாளிப்பதாகும். இது குறித்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று நடை பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குழந்தை நல மருத்துவர்கள் ஷாந்தி மற்றும் லக்ஷ்மி கூறியதாவது:

பணி செய்யும் தாய்மார்கள் அலுவலகத்துக்கு செல்லும் முன்பு, தாய்ப்பாலை ஒரு எவர் சில்வர் டம்ளரில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதனை 6 மணி முதல் 7 மணி நேரம் வரை அறையின் சாதாரண வெப்பத்தில் வைக்கலாம். வீட்டில் இருப்பவர்கள் குழந்தைக்கு ஸ்பூனில் அந்தப் பாலை ஊட்ட லாம். அதற்கு பாட்டிலை பயன் படுத்தக் கூடாது.

தாய்ப்பாலை குளிர்சாதனப் பெட்டியில் அதிகபட்சம் 24 மணி நேரம் வரை சேமித்து வைக்க முடியும். ஒரே சமயத்தில் அதிக தாய்ப்பால் சுரக்கவில்லை என் றால், அதை உறிஞ்சுவதற்கு “பிரெஸ்ட் பம்ப்” கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் ரூ.300 முதல் ரூ.5000 வரை கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவதால் தாய்க்கும் குழந்தைக்கும் எந்த பாதிப்பும் வராது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை யின் டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் இதுபற்றி கூறும்போது, “குழந்தை பிறந்த உடன் தாய்ப் பாலைத் தவிர வேறு எதையும் குழந்தைக்கு கொடுக்கக் கூடாது. முதல் இரண்டு நாட்கள் தாய்க்கு பால் சுரப்பது கடினமாக இருக்கும். பால் மஞ்சள் நிறத்தில் வரலாம். எனினும் அந்த பால்தான் குழந்தைக்கு நல்லது.

குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுப்பது குழந்தையின் உடல் நலத்துக்கு மட்டுமின்றி மூளை வளர்ச்சிக்கும் நல்லது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x