

கரோனா வைரஸ் இருக்கிறதா? இல்லையா? என்பதை பரிசோதனை செய்வதற்கு முன் அறிகுறி இருப்பவர்கள் அனை வரையும் ஒரே வார்டில் வைத்து கண்காணிப்பதால், இந்த நோய் அறிகுறி இருப்பவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை செல்ல அச்சப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் ‘கரோனா’ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு ராஜாஜி மருத்துவமனை, தோப்பூர் காச நோய் அரசு மருத்துவமனை, மேலூர் அரசு மருத்துவமனை உட்பட தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு சிகிச்சை வார்டுகள் உரு வாக்கப்பட்டுள்ளன.
இருமல், சளி, காய்ச்சல், தும்மல் போன்ற தொந்தரவுடன் வருகிற வர்கள் பரிசோதனை செய்வதற்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தனியாக கரோனா புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்படுகின்றனர்.
அவர்களைப் பரிசோதிக்கும் மருத்துவர்கள், நோயாளிக்கு கரோனா அறிகுறி இருந்தால் அவர்களை உள் நோயாளியாக அனுமதிக்கின்றனர். அவர்களின் ரத்த மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்புகின்றனர்.
அதில், அவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டகரோனா வார்டுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு பிரத்தியேக மருத்துவக் குழுவினர் அவர்களை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை வழங்குகின்றனர்.
மதுரையில் இதுவரை 3 நோயாளி களுக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இறந்துள்ளார். 100-க்கும் மேற்பட்டோர் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
இந்த அறிகுறியுடன் அனுமதிக் கப்பட்ட நோயாளிகளை, கரோனா பரிசோதனை நடக்கும் வரை, தனித்தனி அறையில் வைத்து கண்காணிக்காமல் வார்டுகளில் மொத்தமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அறிகுறி இருந்தாலே நோயாளிகளுக்கு அந்த நோய் வந்துவிட்டதாகக் கூறிவிட முடியாது. பரிசோதனையில் அவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
ஆனால், அறிகுறி நோயாளிகள் ஒரே வார்டில் வைக்கும்போது பரிசோதனையில் உறுதி செய்யப்படும் சில நோயாளிகளும் அந்த வார்டில் இருக்க வாய்ப்புள்ளது. அதனால், அவர்களிடம் இருந்து, இந்த நோய் தொற்று அதுவரை ஏற்படாத நோயாளிகளுக்கு பரவ வாய்ப்புள்ளது.
அதனால், தற்போது நோய் அறிகுறியுடன் வீட்டில் இருக்கும் நோயாளிகள் அரசு மருத்துவமனைக்குச் செல்ல அச்சப்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால், மாவட்ட நிர்வாகமும், மருத்துவத் துறையும் காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிப்பதற்கான நம்பிக்கையை அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.