Last Updated : 30 Mar, 2020 07:51 AM

 

Published : 30 Mar 2020 07:51 AM
Last Updated : 30 Mar 2020 07:51 AM

அறுவடைக்கு ஆட்கள் இல்லை; விற்பதற்கு வழியும் இல்லை: கரோனா வைரஸ் பாதிப்பால் கடும் நெருக்கடியில் விவசாயிகள்- வேளாண் பணிகள் முற்றிலும் முடக்கம்

கரோனா வைரஸ் பாதிப்பு விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை. இதனால், மாநிலத்தின் வடக்கில் திருவள்ளூர் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரி வரை, மேற்கில் நீலகிரி தொடங்கி, கிழக்கில் நாகப்பட்டினம், கடலூர் வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள ஆட்கள் யாருமில்லை. வயலுக்கு செல்வோரும் காவல் துறையினரின் கட்டுப்பாடுகளால் வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

நெல் விவசாயத்தைப் பொருத்தமட்டில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது 15 ஆயிரம் ஏக்கர் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. இன்னும் 3 ஆயிரம் ஏக்கரில் அடுத்த மாதம்அறுவடை செய்யப்பட வேண்டும். எனினும் அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாததால் முழுவதும் இயந்திரங்களையே சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாவட்டங்களில் இருந்துதான் அறுவடை இயந்திரங்கள் வர வேண்டியுள்ளதால், போதிய எண்ணிக்கையில் இயந்திரங்கள் கிடைக்கவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குப் பிறகு ஆழ்துளைக் கிணறு வைத்துள்ளவர்கள் முன்குருவை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் மட்டுமே 4 ஆயிரம் ஹெக்டேரில் நாற்றுகள் விடப்பட்டு, தற்போது நடவு நட வேண்டிய தருணத்தில் உள்ளது. கரோனா வைரஸ் அச்சம் காரணமாக பணி ஆட்கள் வராததால் நாற்றுகள் முற்றி வருகின்றன. இது தவிர, இந்த மாவட்டத்தில் 7 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தி வயல்களில் உடனடியாகக் களை எடுக்க வேண்டியுள்ளது. 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் அடுத்த மாதம் உளுந்து, பயறு வகைகள் அறுவடை ஆக வேண்டியுள்ளது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்று பாசனப் பகுதியில் இன்னும் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் நடவுப் பணிகள் நடைபெற வேண்டியுள்ளது.

பெருமளவில் நஷ்டம்

மாநிலம் முழுவதும் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 850 ஹெக்டேரில் மலர் சாகுபடி நடைபெறுகிறது. கிருஷ்ணகிரி,நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்கொய்மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கான போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த மாவட்டங்களின் விவசாயிகள் மலர்கள் பறிப்பதையே நிறுத்தி விட்டனர். இதனால் அவர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது மல்லிகை, சாமந்தி உள்ளிட்ட மலர் வகைகள் 410 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. ஆனால்மலர்களுக்கு தேவை அறவே இல்லாததால் மலர் பறிப்பதை விவசாயிகள் நிறுத்தி விட்டனர். சென்னை மொத்த மலர்வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.மூக்கையாவிடம் கேட்டபோது, “சென்னைகோயம்பேடு சந்தைக்கு வழக்கமான நாட்களில் 60 லாரிகள் வரை மலர்கள் வரத்து இருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை (நேற்று) வெறும் 6 லாரிகள் மட்டுமே வந்தன. அவற்றில் பாதி கூட விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கின்றன” என்று தெரிவித்தார்.

மலர் சாகுபடி செய்யும் விவசாயி களைப் போலவே காய்கறி பயிரிடும் விவசாயிகளும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். வயல்களில் காய்கறி அறுவடைக்கு தொழிலாளர்கள் வராதது ஒரு காரணம் என்றால், சந்தைகளுக்கு கொண்டு செல்ல வாகன ஓட்டுநர்கள் வர மறுப்பதும், மொத்த விற்பனை சந்தைகளில் வியாபாரம் மிகவும் குறைவாக இருப்பதும் பிரதான காரணங்களாக உள்ளன.

இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி சந்தை சங்க செயலாளர் கே.ராசியப்பன் கூறும்போது, “ஒட்டன் சத்திரம் சந்தைக்கு திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் என 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து தினமும் 200 சிறிய, பெரிய லாரிகளில் காய்கறி வரத்து இருக்கும். அதேபோல் இங்கிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்துக்கும் தினமும் 70 பெரிய லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படும். எங்கள் சந்தையிலிருந்து 70 சதவீதம் காய்கறிகள் கேரளத்துக்கு செல்கின்றன. 30 சதவீதம்தான் இங்குள்ள மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

விவசாயிகள் தவிப்பு

இந்நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் லாரி ஓட்டுநர்கள் அங்கு செல்ல தயங்குகிறார்கள். அதேபோல் இங்கிருந்து மும்பைக்கு கொண்டு செல்வதற்காக கொள்முதல் செய்யப்பட்ட 1000 மூட்டை முருங்கைக்காய், கடந்த 5 நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் ஒட்டன்சத்திரம் சந்தை வியாபாரம்முடங்கியுள்ளளது. இந்த நிலைமைகாரணமாக நாங்கள் வழக்கமாக கொள்முதல் செய்யும் விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை வாங்க முடியவில்லை. அதனால் வயல்களில் விளைந்து கிடக்கும் காய்கறிகளை என்ன செய்வது என தெரியாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள்” என்றார்.

இதுதவிர பழ வகைகள் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பெரும் சிக்கலைஎதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தர்ப்பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடைக்கு ஆள் இல்லாமலும், அறுவடை ஆன பழங்களை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்ப்பூசணி விவசாயிகளைப் பொருத்தமட்டில் தமிழகத்தை விட கேரள மாநில சந்தை மூலம்தான் அவர்களுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது. தற்போது கேரளத்துக்கு வாகனங்கள் செல்ல முடியாத சூழலால் விளைந்த பழங்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.

தோட்டக்கலைத் துறை நடவடிக்கை

இந்த இக்கட்டான சூழலில், விவசாயி களுக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மாவட்ட தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மாவட்டத்தில் மட்டும் தற்போது 1,079 ஹெக்டேரில் கீரை, 332 ஹெக்டேரில் காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த விவசாயிகளிடம் இருந்து தினமும் 1 டன் காய்கறி, 500 கீரைக் கட்டுகளை நேரடியாக கொள்முதல் செய்து, தோட்டக்கலை வளர்ச்சி முகமை மூலம் சென்னையில் 5 இடங்களில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளளனர். மாவட்டத்தில் உள்ள 2 குளிர் பதனக் கிடங்குகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே விவசாயம் சார்ந்த பணிகள், போக்குவரத்து ஆகியவற்றுக்கு நிலவி வரும் அனைத்து தடைகளையும் நீக்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் அழுகும் நிலையில் உள்ள விளை பொருட்களை உரிய காலத்தில் அறுவடை செய்யவும், தேவையான நுகர்வோரிடம் கொண்டு சேர்க்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x