விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையொட்டி பல்வேறு விளைவுகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் கருகிக் கிடப்பதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இதேநிலை தமிழகம் முழுவதும் பரவிக் கிடக்கிறது.

ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தர்பூசணியை வாகனங்களில் ஏற்றி நகரங்களுக்கு கொண்டு போக முடியவில்லை. ஒசூர் சந்தையில் ரூ.1 கோடி மதிப்புள்ள 150 டன் மலர்கள் விற்க முடியாமல் தினமும் அழுகி வருகின்றன. பன்னீர்ரோஜா மலர் விற்பனை செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கின்றது. வாசன திரவிய தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மலர் கொள்முதல் நிறுத்தப்பட்டதாலும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்ட விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் மற்றும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் உற்பத்தி செய்து வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ4 கோடி மதிப்புள்ள திராட்சைகள் அழுகி பாழாகியுள்ளன.

அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்ற அமைச்சரின் அறிவிப்பு நடைமுறையில் பயன்பாட்டுக்கு வந்ததாகத் தெரியவில்லை. இந்த அலட்சியப் போக்கு நீடித்தால் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மீட்க முடியாத அளவுக்கு கடும் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்படும்.

இவ்வாறு அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in