

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டுசெல்ல அனுமதிப்பது தொடர்பாக தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவருடன், கேரள அமைச்சர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக, கோவை மாவட்டத்திலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பாதையில் உள்ள 9 சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறி, அரிசி, கோழி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் செல்வது தடைபட்டுள்ளது. இதையடுத்து, கேரளாவின் திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுடன் நேற்று நடுப்புணி சோதனைச் சாவடியில் ஆலோசனை நடத்தினார். பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "பல இக்கட்டான நேரங்களில் தமிழகம் கேரளாவுக்கு உதவி வருகிறது. இதன்படி, கரோனா பாதிப்பு அதிகம் உள்ள கேரளாவுக்கு, கோவை மாவட்டத்தில் உள்ள 9 சோதனைச்சாவடிகள் வழியாக உணவுப் பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு உணவுப் பொருட்களை கொண்டுசெல்லும் வாகனங் களுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அனுமதிச் சீட்டு வருவாய்த் துறை மூலம் அளிக்கப்படும். தமிழகத்தில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தமிழகத்தில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல, அரிசி, காய்கறி இறக்கிவிட்டு தமிழகம் திரும்பும் லாரிகளை சுத்தப்படுத்துவதுடன், வாகன ஓட்டிகளுக்கு கேரளாவில் மருத்துவப் பரிசோதனை, உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தருமாறு கேரளாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.