Published : 30 Mar 2020 07:12 AM
Last Updated : 30 Mar 2020 07:12 AM

கரோனா எழுப்பும் கேள்விகள்!

1. ‘உண்மையை சொல்வதும், பிற நாடுகளில் நடந்த மருத்துவ நெருக்கடி அனுபவங்களை பகிர்தலும் மட்டுமே நம்மைக் காக்கும்’ என்பது இங்கிலாந்து, அமெரிக்க முன்னோடி மருத்துவ ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து. இங்கு, இப்போது சொல்லப்படுபவை உண்மையான புள்ளிவிவரங்களா?

2. பரிசோதனை மட்டுமே இதற்கு தீர்வு என்று பல நாடுகளும் கூறியுள்ளன. தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சோதனையால்தானே நோயை முடக்கின. அப்படி இருக்க, இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க வில்லை?

3. நமக்கு அருகில் உள்ள நாடு 10,00,000 பேருக்கு 6,800 பேரை சோதனை செய்யும்போது, நாம் வெறும் 18 பேரைத்தான் சோதிக்கிறோம். ஆரம்பத்தில் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் (ICMR) ‘அனைவருக்கும் சோதனை தேவை இல்லை’ என்ற நிலைப்பாட்டில் இருந்தது. இப்போது, ‘அதிகம் பேரை சோதிக்கலாம்’ என்ற நிலைப்பாடுக்கு அவர்கள் வந்த பிறகும், போதிய அளவு பரிசோதனை கிட் வந்த பிறகும் ஏன் தாமதம்?

4. ‘இந்தியாவில் 25 கோடி பேர் தொற்றுப்பெறுவார்கள். 25 லட்சம் பேர் வரை நோயுறலாம். மருத்துவம் தேவைப்படலாம்’ என்கிறது ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம். நம்மிடம் இருக்கும் மருத்துவர்கள், மருத்துவமனைகள், உபகரணங்கள் ஆகிய எதுவும் இதை மீட்டெடுக்கும் எண்ணிக்கையில் இல்லாதபோது, இதை எப்படி சமாளிக்கப் போகிறோம்?

5. நம் நாட்டில் காய்ச்சலில் ஏற்படும் மரணத்தைவிட வாழ்வியல் நோயில் ஏற்படும் மரணங்கள்தான் நான்கு மடங்கு அதிகம். இந்த சூழலில், பிற நோய்களில் கவனம் குறைவதும், அந்த நோய்களுக்கான புறநோயாளி சிகிச்சை நிலையங்கள் மூடப்படுவதும் ஆபத்து அல்லவா.

6. தனியார் மருத்துவமனைகள் இன்னமுமே முன்வர தயங்கித் தடுமாறுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை அரசிடம் 1,750 வென்ட்டிலேட்டர்கள் என்றால், தனியாரிடம் 465 உள்ளன. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பலமும், கட்டமைப்பும் கொண்ட தனியார் மருத்துவமனைகளை கரோனாவுக்கு எதிரான அரசின் செயல்திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டாமா?

7. சீன அரசு வூஹானுக்கு மட்டும் 2,000 சீனமுறை மரபு மருத்துவர்களை அனுப்பியதும், அவர்களது QPD கஷாயம் முதலுதவி செய்ததும் பதிவாகி உள்ளது. இந்த சூழலில், ஆயுஷ் துறையினரிடம் தாங்கள் நேற்று பேசியது மகிழ்ச்சி. அவர்களது பரிந்துரைகளை உடனே நடைமுறைப்படுத்துங்கள். நிலவேம்போ, கபசுர குடிநீரோ அவர்கள் சொல்வதை, நாடெங்கும் ஊற்றி நம்பிக்கையைக் கொடுங்கள். வலியுடன் காத்திருக்கும் மக்களுக்கு அந்தக் கஷாயம், நோய் எதிர்ப்பாற்றலை மட்டுமல்லாது, பெரிய உளவியல் உறுதியையும் சேர்த்து தரும்.

8. ‘வராது, வந்தால் பார்த்துக் கொள்ளலாம்’ என்பது, அழும் குழந்தைக்கு நிலவைக் காட்டி உறங்க வைக்கும் போக்கு. சில நேரங்களில் ஊடகம் மூலம் நாங்கள் பெறும் செய்தி அப்படித்தான் உள்ளது. முன்வரிசைக் காவலர்களாய் உள்ள 7 லட்சம் மருத்துவர்களின் எண்ணிக்கை பத்தாது என்றால் 2.25 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களையும் சேர்த்து முதல்நிலை பாதுகாப்புக்கு நிறுத்தலாம்.

9. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட உரையாடல் நடத்தியதாகவும், இந்த வைரஸ் பற்றியவலுவான புரிதலை சீனா வைத்திருப்பதாகவும், அந்த நாட்டோடு இணைந்து பணியாற்றுவோம் என்றும் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். சீனாவின் அனுபவங்களை நாமும் பரிமாறிக்கொண்டு இந்தியாவில் பயன்படுத்துவது குறித்து தாங்கள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

முதலில், ‘சீன வைரஸ்’ என்று சாடிய ட்ரம்ப் இன்று இறங்கி வந்து அமெரிக்க மக்களை காப்பதற்கு சீன அனுபவம் தேவை என்ற நிலையை எடுக்கும்போது மாமல்லபுரத்தில் இந்திய - சீன நல்லுறவுக்கான பெரும் நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ள சூழலில் நீங்கள் அத்தகைய முன்முயற்சியை மேற்கொள்ளலாமே!

10. நான்கு மணி நேர அவகாசத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. அரசின் எந்த துறையும் எந்த முன்னேற்பாடும் செய்யாதபோது, தனி மனிதன் என்ன செய்திருக்க முடியும்? சொந்த ஊருக்கு எப்படி திரும்புவது என விழிபிதுங்கி டெல்லி ஆனந்த விகாரிலும், காசர்கோடு தொழிற்கூடத்திலும், ஸ்ரீபெரும்புதூரின் ஊர் விளிம்புகளிலும் ஒட்டிய வயிறுடன் லட்சக்கணக்கானோர் நிற்கின்றனர். ஒட்டிய வயிற்றில் ஒருவேளை அந்த பாதகக் கிருமியும் ஒட்டியிருந்தால், இந்த பரவல் தடுப்பு உத்தியே எதிர்மறையாக திரும்பிவிடக்கூடுமே!

11. இந்தியாவில் 45 கோடி பேர் அன்றாடம் கூலிவேலை செய்து பிழைப்பவர்கள். ஊரடங்கால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகள் செய்யப் படாதது ஏன்?

12. தினம் முன்நின்று விஷயங்களைப் பகிரவேண்டிய அரசின் முதன்மை நலவாழ்வுச் செயலரும், மருத்துவ அமைச்சரும் ஓரிரு மணித்துளிகளேனும் வெறுமனே சொற்களைக் கோர்த்து பேசி நகராமல், விவரங்களையும் வியூகங்களையும் திடமாய்ப் பேசி மக்களை நித்தம் பாதுகாப்பாய் அரவணைக்க வேண்டாமா?

இவையெல்லாம் என் கேள்விகள் அல்ல, கண்ணுக்குத் தெரியாத அந்த வைரஸ், சமூகத்தில் உருவாக்கிக்கொண்டிருக்கும் கேள்வி. லட்சுமண ரேகையை மதிக்க அனைவரும் மிச்சம் இருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில் எழும் கேள்வி!

கட்டுரையாளர்:மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x