Published : 30 Mar 2020 07:03 AM
Last Updated : 30 Mar 2020 07:03 AM

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது; சமையல் எரிவாயு சிலிண்டர் எப்போதும் கிடைக்கும்- ஐஓசி தலைவர் சஞ்ஜீவ் சிங் தகவல்

ஊரடங்கு அமலில் உள்ள காலம் முழுவதையும் சமாளிக்கும் அளவுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) தலைவர் சஞ்ஜீவ் சிங் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்டவை மட்டுமின்றி ஆலைகளில் பயன்படுத்தப்படும் இயற்கைஎரிவாயு (சிஎன்ஜி) பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பெட்ரோல் நிரப்பு நிலையங்கள் செயல்படுகின்றன. அதேபோல சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக மையங்களும் செயல்படுகின்றன.

இதுகுறித்து ஐஓசி தலைவர் சஞ்ஜீவ் சிங் நேற்று கூறியதாவது:

ஊரடங்கு காரணமாக விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. எனினும் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பே இல்லை.

அதேநேரம் சமையல் எரிவாயுசிலிண்டருக்கான தேவை அதிகரித்து வருகிறது. சிலிண்டருக்காக முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை 200 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று பொதுமக்கள் அஞ்சத் தேவையில்லை. அவ்வாறு பயந்து முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எவ்வித சிரமும் இன்றி சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முழுவதற்கும் எவ்வளவு பெட்ரோல், டீசல் மற்றும்சமையல் எரிவாயு சிலிண்டர் தேவைப்படும் என்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x