

ஊரடங்கு உத்தரவு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசன பகுதிகளான ஸ்ரீவைகுண்டம், சாயர்புரம், ஏரல், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
வழக்கமாக இந்த பகுதியில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் தான் வாழைத்தார்கள் விளைச்சல் அடையும். இந்த காலங்களில் வாழைத்தார்கள் வெட்டப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கும் அனுப்பப்படும். வழக்கம் போல் இந்த ஆண்டும் வாழைத்தார்கள் விளைச்சல் அடைந்துள்ளன.
ஆனால், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை காரணமாக 21 நாள் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வாழைத்தார்களை வெட்டி வெளியே அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எ
னவே, வாழைத்தார்கள் தோட்டத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுபோல வாழை இலைகளையும் குறித்த காலத்தில் அறுத்து விற்பனைக்கு அனுப்ப முடியாததால் கிழிந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியில் சுமார் 200 ஏக்கரில் வெற்றிலை கொட்டிக்கால் விவாயம் நடைபெறுகிறது.
இங்கு அறுவடை செய்யும் வெற்றிலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மும்பை, டெல்லி போன்ற இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் வெற்றிலையை அறுவடை செய்து அனுப்ப முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் வாழை மற்றும் வெற்றிலை விவசாயிகளுக்கு கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என்றார் அவர்.