Last Updated : 29 Mar, 2020 06:26 PM

 

Published : 29 Mar 2020 06:26 PM
Last Updated : 29 Mar 2020 06:26 PM

சிதம்பரம் அருகே வீடு வீடாகச் சென்று இலவச முகக் கவசம்; விழிப்புணர்வு ஏற்படுத்தும் 5-ம் வகுப்பு மாணவி: குவியும் பாராட்டு 

கடலூர்

சிதம்பரம் அருகே வீடு வீடாகச் சென்று இலவசமாக முகக் கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் 5-ம் வகுப்பு மாணவி ராகினி ஸ்ரீக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதனால் இந்தியாவில் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெளியில் வரும் பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல பேரிடம் பணம் இருந்தும் முகக் கவசம் கிடைக்காததால் அதனை அணிவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகள் ராகினி ஸ்ரீ , கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வீடு வீடாகச் சென்று முகக் கவசம் வழங்கி வருகிறார்.

5-ம் வகுப்பு படித்து வருகிறார் ராகினி ஸ்ரீ. பள்ளிகளுக்கு விடுமுறை விட்டதைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட முகக் கவசங்களை அவரே வீட்டில் தைத்து அவர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு வீடு, வீடாகச் சென்று இலவசமாக வழங்கி வருகிறார். இது அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மாணவி ராகினிஸ்ரீ கூறுகையில், ''எங்களுக்குப் பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளது. டிவி பார்க்கும்போது மாஸ்க் தட்டுப்பாடு என்பதை அனைவரும் டிவியில் கூறுவதைப் பார்த்தேன். அதன்பிறகு அம்மாவின் ஆலோசனையின்படி நானே உட்கார்ந்து 100க்கு மேற்பட்ட முகக் கவசங்களைத் தைத்து எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்குக் கொடுத்தேன். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், அவசர காரணங்களுக்காக வெளியே செல்பவர்கள் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டுமென்று கூறி இலவசமாக முகக் கவசம் கொடுத்து வருகிறேன்'' என்றார்.

ராகினி ஸ்ரீக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x