

பிரதமர் மோடிக்கு, மதுரை மக்களவை உறுபபினர் சு.வெங்கடேசன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
சவால்களும் துயரமும் ஒன்றினை ஒன்று விஞ்சிக்கொண்டிருக்கும் வேளையில், நாடு தத்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் உங்களைச் சுற்றியுள்ள முக்கிய ஆலோசகர்கள் பல்வேறு காப்புப்பணிகளை உங்களுக்கு விளக்கிக்கொண்டிருக்கக் கூடும்.
முகம் தெரியாத அந்தக் கிருமியை முன்னேறவிடாமல் தடுக்க முடியும் என்ற மிச்சமிருக்கும்நம்பிக்கையின் அடிப்படையிலே இதனை எழுதுகிறேன்.
தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சோதனையால் தான் நோயை வென்றுள்ளது. இந்தியா ஏன் இன்னமும் தீவிர சோதனைத் திட்டத்துக்குள் இறங்க மறுக்கிறது. சீனாவில் 10 லட்சம் பேருக்கு 6800 பேரினை சோதனை செய்யும்போது, நாம் வெறும் 18 பேரைத்தான் சோதிக்கின்றோம்.
ஆரம்பத்தில் ஐசிஎம்ஆர் (ICMR) அனைவருக்கும் 'சோதனை தேவையில்லை' என்றது, இப்போது 'அதிகம் பேருக்கு சோதிக்கலாம்' என்ற பின்பும், போதிய அளவு ‘டெஸ்டிக் கிட்’ இருந்தும் ஏன்இன்னும் சோதனைக்கு தாமதம்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், இந்தியாவில் 25 கோடி பேருக்கு நோய்த்தொற்று வரும், அதில் 25 லட்சம் பேர்வரை நோயுறலாம்; மருத்துவ சிகிச்சை தேவை, என்கின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் அரசு மருத்துவமனைகளில் 1750 வெண்டிலேட்டர்கள் உள்ளன. மேலும் 465 வெண்டிலேட்டர்கள் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் அரசின் செயல் திட்டத்துக்குள் கொண்டு வர வேண்டும்.
சீனாவில் வுகானில் 2000 சீனமுறைமரபு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தும், அவர்கள் அளித்த கியூபிடி (QPD) கசாயம் முதலுதவி செய்து காப்பாற்றியதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இங்குள்ள ஆயுஷ்துறை சார்பில் நிலவேம்பு, கபசுரகுடிநீர் என மரபு மருத்துவம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும். அதில், 7 லட்சம் அலோபதி மருத்துவர்களோடு, 2.25 லட்சம் ஆயுஷ் மருத்துவர்களையும் இணைந்து செயல்படச் செய்யலாம்.
‘சீன வைரஸ்’ என முதலில் சாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது இறங்கி வந்து அமெரிக்க மக்களை காப்பதற்கு சீன அனுபவம் தேவை என்ற நிலை எடுத்துள்ளார்.
சீனாவின் மருத்துவ அனுபவங்களையும் இந்தியாவில்பயன்படுத்தவும் தாங்கள் உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அக்கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.