

கரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு அறிவிப்பை மீறி கூடுதல் விலைக்கு காய்கறி, இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். காய்கறி, பால், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க சரக்கு வாகனங்கள் செல்ல அரசு விதி விலக்கு வழங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசியப் பொருட்களை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது சம்பந்தமாக 1077 கட்டணமில்லா தொலைபேசியில் பொதுமக்கள் புகார் அளிக்கவும், வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், தமிழகம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களான காய்கறிகளின் விலையை பல மடங்கு உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். சேலத்தில் இன்று தக்காளி, கத்திரி, வெண்டை, முள்ளங்கி, முட்டைகோஸ், காரட் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரையிலும் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
காளான் 200 கிராம் பாக்கெட் ரூ.40 விலையில் இருந்தது. தற்போது 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோழிக் கறி கிலோ ரூ.80க்கு முன்பு விற்கப்பட்டது. இப்போது கிலோ ரூ.120 விலையில் விற்கப்படுகிறது. 450 ரூபாய்க்கு விற்கப்பட்டஒரு கிலோ நாட்டுக் கோழி இப்போது ரூ.550 விலைக்கு விற்கப்படுகிறது. 600 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ ஆட்டிறைச்சி தற்போது ரூ.700 முதல் ரூ.900 வரை விற்கப்படுகிறது. மீன் ரகங்களுக்கு ஏற்ப 40 சதவீதம் விலை உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
உலகளாவிய மிகப்பெரும் அச்சுறுத்தலை பொதுமக்கள் வீடுகளில் முடங்கி சமாளித்து வருகின்றனர். தொழில் வாய்ப்பு முடங்கி, வருவாய் இன்றி முடங்கியிருக்கும் பொதுமக்கள், தற்போதைய சூழ்நிலையில், உணவு தேவையை மட்டுமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய இக்கட்டான காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதுபோன்ற அசாதாரண காலநிலையை, வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் அன்றாட நுகர்வுப் பொருட்களை விலை உயர்த்தி விற்பனை செய்வதை, மத்திய, மாநில அரசுகள் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.