

இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்த உலமாக்கள் சென்ற மசூதி அருகே வசிக்கும் 25 ஆயிரம் வீடுகளில் மருத்துவக் குழுவினர் இன்று வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
இந்தோனேசியாவில் இருந்து சேலம் வந்த 11 உலமாக்கள் உட்பட 19 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாநிலம் முழுவதும் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் கரோனா தொற்றால் பாதித்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்திட, சுகாதாரச் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இதன்படி, சேலம் சூரமங்கலம், சன்னியாசிகுண்டு, கிச்சிப்பாளையம், பொன்னம்மாபேட்டை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட ஐந்து மசூதிகளில் இந்தோனேசியாவைச் சேர்ந்த உலமாக்கள் மதப் பிரசங்கத்தில் ஈடுபட்டனர். இவர்களில் ஆறு பேருக்கு கரோனா தொற்று அறிகுறி உறுதியாகியுள்ளது.
எனவே, இவர்கள் தொடர்பில் இருந்த மசூதிக்கு அருகில் உள்ள 25,000 வீடுகளில் சுகாதாரப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் கொண்ட குழு இன்று வீடு வீடாகச் சென்று விவரங்களை கேட்டறிந்து, மருத்துவப் பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்த வீடுகளில் வசிப்பவர்களுக்கு யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளதா என்பதை மருத்துவக் குழு பரிசோதனை செய்து, அது சம்பந்தமான விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.