

ஞாயிற்றுக்கிழமையான இன்று உழவர் சந்தை, இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. போதிய இடைவெளி விட்டு நிற்றல், முகக் கவசம் அணிதல் போன்ற கரோனா அச்சுறுத்தலை தவிர்க்கும் முக்கியக் கட்டுப்பாடுகள் காற்றில் பறந்துபோயின. அதிகாரிகள், போலீஸார் என பலரும் முக்கிய நாளான இன்று எதையும் கண்டுகொள்ளவில்லை. அத்துடன் வியாபாரிகளும் இன்று விலையை உயர்த்தினர்.
சமூக விலகல் மட்டுமே கரொனாவை எதிர்கொள்ள சிறந்த வழி என்று உணர்ந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. அதன்படி கரோனாவைத் தடுக்க புதுவை அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக காரணமின்றி வெளியில் சுற்றுவோர் ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உட்படுத்தப்படுவர் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டாலும் பொதுமக்களின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துக் கடைகளைத் திறக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. அதே வேளையில் கடைகளில் அதிக கூட்டத்தைக் கூட்டாமல் சமூக விலகலைக் கடைப்பிடித்து பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் மக்களின் நடமாட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது.
ஊரடங்கு அமலாகிய முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிகாலை முதல் மக்கள் இருசக்கர வாகனங்களில் இறைச்சிக் கடைகளுக்கும், உழவர் சந்தைக்கும் படையெடுக்கத் தொடங்கினர். பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு ஒரு சில இறைச்சி மற்றும் மீன் விற்பனை மையங்கள் இருந்ததால் இறைச்சிப் பிரியர்கள் சமூக விலகலைச் சிறிதும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக முண்டியடித்துக் கொண்டு வாங்கினார்கள்.
ஒரு மீட்டர் இடைவெளி விட்டு இருக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் காற்றில் பறந்தன. அதில் சிலர் மட்டுமே முகக் கவசம் அணிந்தும், பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியாமலும் இருந்தனர். இறைச்சி வியாபாரிகள், காய்கறி வியாபாரிகளில் பலர் முகக் கவசம் அணியவில்லை. அத்துடன் விலையும் உயர்த்தனர்.
இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு ஒரு கிலோ தோலுரித்த கறிக்கோழி விலை ரூ.60 முதல் 70 வரை விற்கப்பட்டது. ஆட்டிறைச்சி ஒரு கிலோ ரூ.600க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வார காலம் கடந்த பிறகு இன்று ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.140 க்கும், ஆட்டிறைச்சி ரூ.850க்கும் விற்கப்பட்டது.
இதேபோல் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் பிடிக்கப்பட்ட ஜிலேபி, கெண்டை வகை மீன்கள் வழக்கம்போல் கிலோ ரூ.180க்கு விற்கப்பட்டது. கடல் வகை மீன்கள் குறைவாக விற்பனைக்கு வந்ததால் அதனுடைய விலையும் அதிகமாகவே விற்கப்பட்டது.
பொதுவாக இறைச்சிக் கடைகளில் விற்கப்படும் கோழி மற்றும் ஆடுகள் கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து சான்றளித்த பின்புதான் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். ஆனால், இந்த நடைமுறை பல ஆண்டுகளாக புதுச்சேரியில் பின்பற்றப்படுவதில்லை. கரோனா அச்சுறுத்தல் உள்ள இக்காலத்தில் இதை நடைமுறைப்படுத்த புதுச்சேரி அரசு தவறிவிட்டது. விலையையும் கண்காணிக்கவில்லை" என்றனர்.
உழவர் சந்தையோ திருவிழா கூட்டம் போல் இருந்தது. விவசாயிகள் மட்டுமின்றி பல வியாபாரிகளும் இங்கு கடையிட்டிருந்தனர். பல காய்கறிகள் விலை இரு நாட்கள் முன்பிருந்த விலையை விட பல மடங்கு அதிகரித்திருந்தது. ஆட்சியர், முதல்வர் ஆய்வு செய்தால் மட்டும் போதாது. விலையைக் கட்டுக்குள் வைக்கவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்கின்றனர் பொதுமக்கள்.