கீழ்ப்பாக்கம் பெண் மருத்துவர் கொலை: திரிபுரா பட்டதாரி இளைஞர் சிக்கினார் - செல்போனுக்காக கொலை செய்ததாக வாக்குமூலம்

கீழ்ப்பாக்கம் பெண் மருத்துவர் கொலை: திரிபுரா பட்டதாரி இளைஞர் சிக்கினார் - செல்போனுக்காக கொலை செய்ததாக வாக்குமூலம்
Updated on
2 min read

கீழ்ப்பாக்கம் பெண் மருத்துவரை கொலை செய்ததாக அதே குடியிருப்பில் வசித்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜேசு (35). இவரது மனைவி சத்யா (32). இருவரும் டாக்டர்கள். இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. 2 மகன்கள் உள்ளனர். சத்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் படித்து வந்தார். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை கும்மாளம்மன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் சத்யாவும், அவருடன் படிக்கும் சங்கீதா என்ற பெண்ணும் வாடகைக்கு வசித்தனர்.

கடந்த 20-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சத்யா, கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக அதே குடியிருப்பின் முதல் தளத்தில் வசிக்கும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

டாக்டர் சத்யா தங்கியிருந்த குடியிருப்பின் தரை தளத்தில் வீட்டு உரிமையாளரும், முதல் தளத்தில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சிரஞ்சித், அவருடைய தம்பி ஹரிந்தம் தீப்நாத்(22) ஆகியோரும் வசித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார் சிரஞ்சித். மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் முடித்துள்ள ஹரிந்தம், வேலை தேடி வந்திருக்கிறார். 2 மாதங்களுக்கு முன்புதான் அந்தக் குடியிருப்புக்கு சத்யா வந்துள்ளார்.

சத்யா தினமும் வெளியே சென்று வரும்போது அவர் வைத்திருந்த செல்போனை கவனித்த ஹரிந்தம், அதை திருடுவதற்கு சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தார். கடந்த 20-ம் தேதி சத்யா வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாடிக்கு துணி காய போடுவதுபோல சென்று சத்யா வீட்டை நோட்டமிட்ட ஹரிந்தம், கதவு திறந்திருப்பதை பார்த்ததும் நைசாக உள்ளே நுழைந்து செல்போனை எடுக்க முயன்றுள்ளார். இதை சத்யா பார்த்துவிட்டார்.

சத்யாவை உயிருடன் விட்டால் தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று நினைத்து, அவரை கீழே தள்ளி, சமையல் கத்தியை எடுத்து கழுத்தில் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரது செல்போனை எடுத்துச் சென்று கோயம்பேட்டில் செல்லையா என்பவரின் கடையில் விற்றுள்ளார். சந்தேகம் அடைந்த கடைக்காரர், ஹரிந்தமுக்கு தெரியாமலே அவரை மொபைல் கேமராவில் படம் எடுத்து வைத்துக்கொண்டார்.

இந்நிலையில், சத்யாவின் செல் போன் ஐஎம்இஐ எண்ணை வைத்து நடத்திய விசாரணையில், செல்லையா பிடிபட்டார். ஹரிந்தமிடம் இருந்து செல் போன் வாங்கியதை ஒப்புக் கொண்ட செல்லையா, அவரது போட்டோவை போலீஸில் கொடுத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து ஹரிந்தம் தீப்நாத்தை நேற்று காலை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘‘சத்யா வைத்திருந்தது விலை உயர்ந்த ஐபோன் என்று நினைத்துதான் திருடினேன். ஆனால் அது ஐபோன் இல்லை. போனை எடுக்கும்போது மற்றொரு அறையில் இருந்த சத்யா திடீரென வெளியே வந்து பார்த்து கூச்சல் போட்டதால் அவரை கத்தியால் குத்தினேன்’’ என்று வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார்.

‘‘கொலை நடந்த நாளில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்த நிலையில் மறுநாள் கிடைத்த செல்போன் தகவலை வைத்து கொலையாளியை பிடித்து விட்டோம்" என்றனர் போலீஸார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in