ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட மதுரை மக்கள்: இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்கா கூட்டம்- சமூக விலகலை மதிக்கவில்லை

நெல்பேட்டை இறைச்சி மார்கெட் - படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
நெல்பேட்டை இறைச்சி மார்கெட் - படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
Updated on
2 min read

கரோனா பரவாமல் தடுக்க சமூக விலகலைக் கடைபிடிக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இறைச்சிக் கடைகளில் கட்டுக்கடங்காமல் கூடினர்.

நாடு முழுவதும் கரோனா பரவலைஹ் தடுக்க ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகள், மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் சமூக விலகலை கடைபிடித்து மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் சமூக விலகலை முழுமையாக கடைபிடிக்காமல் உள்ளனர். குறிப்பாக கிராமங்களில் வீடுகளின் முன்பு மக்கள் ஒரே நேரத்தில் கூடி மணிக்கணக்கில் பேசுவதும், இளைஞர்கள், சிறுவர்கள் கூட்டமாக கூடி காளைகளை விரட்டி ஜல்லிக்கட்டு பயிற்சி எடுப்பதும், கோழிகளை சண்டைக்கு விடுவதுமாக பொழுது போக்குகின்றனர்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக காய்கறி கடைகள், மளிகை கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் நோய் தொற்று பரவாமல் தடுக்க ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு கடைகளுக்கு முன்பும் போலீஸார் கோலப்பொடியால் வட்டமிட்டுள்ளனர். இருப்பினும் அதையாரும் பின்பற்றுவதில்லை. பழையபடி கடைக்கு முன்பு ஒரே நேரத்தில் கூடி நின்றே பொருட்கள் வாங்குகின்றனர்.

இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் மதுரையில் இறைச்சிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. இங்கும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று கறி வாங்க கட்டம் போட்டிருந்தாலும் அதை யாரும் மதிக்கவில்லை. கடையை மொய்த்தபடி நின்றே கறி வாங்கினர்.

அனைத்து கறிகடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதேபோல் காய்கறி கடைகள், மளிகை கடைகளிலும் கூட்டம் இருந்தது.

கடைக்கு வந்தவர்களால் சாலைகளில் இரு சக்கர வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஊரடங்கு அமலில் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை.

ஒத்தக்கடை நரசிங்கபுரம் பகுதியில் மக்கள்..

ஆனால் போலீஸாரோ கரோனா பரவாமல் தடுக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அத்தியவாசியப் பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் மக்கள் வெளியே வர வேண்டும்.

தேவையில்லாமல் சாலையில் நடமாடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைக்கில் இடைவிடாமல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in