

கரோனா தொற்று ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் தங்கியிருந்த வண்ணாரப்பேட்டை விடுதியை சுற்றி உள்ள 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள 15000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
கரோன வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் அபுதாபியில் இருந்து நெல்லை வந்த நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபியில் இருந்து நெல்லை வந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சில நாட்கள் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த விடுதியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த நோயின் தாக்கம் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து கண்டறியும் வகையில் அந்தப் பகுதியில் மாநகராட்சிக்கு உட்பட்ட 4. 5. 6 , 8,9, 10 25, என 7 வார்டுகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்க முடிவு செய்யப்பட்டது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீன் மருத்துவர் ரவிச்சந்திரன் தலைமையில் மாநராட்சி பணியாளர்கள் 500 பேர் , மருத்துவ மாணவர்கள் 170 பேர் , மாநகராட்சி , மருத்துவத்துறை அதிகாரிகள் 72 பேர் என மொத்தம் 800 பேர் கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர் .
இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் தொடங்கி வைத்தார். இந்த பணியாளர்கள் அந்த எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளுக்குச் சென்று வீடுகளில் இருக்கும் நபர்கள் எத்தனை பேர் , அவர்களுக்கு காய்ச்சல் , சளி, இருமல் , மூச்சுதிணறல் உள்ளதா என கண்டறிதல், அவ்வாறு காய்ச்சல் இருப்பின் அவர்களை உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர் . சுமார் 15 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுக்கின்றனர் .