

டெங்கு, கரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களைக் காக்க தமிழக அரசு தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தை உடனடியாக திருத்தியமைக்க வேண்டும் எனதமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரோனாவின் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார். தமிழகத்திலும் கரோனா பாதிப்பைக் குறைக்க ‘தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டம்-1897’ ஷரத்து 2-ன்படி, தமிழகத்தின் அனைத்து எல்லைகளையும் மூடி நோய் பரவாமல் தடுக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இத்தருணத்தில் டெங்கு, கரோனா போன்ற கொடிய நோய்களில் இருந்து மக்களைக் காக்கதமிழக அரசு தனக்குள்ள சிறப்புஅதிகாரத்தைப் பயன்படுத்தி தொற்றுநோய்கள் தடுப்புச்சட்டம்-1897-ஐ (THE EPIDEMIC DISEASESACT-1897) உடனடியாக திருத்தியமைத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ‘வரும்முன் காப்போம்’ என்ற ரீதியில் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த என்எல்சி தொழிற்சங்கத் தலைவர் எம்.சேகர்:
தொற்றுநோய்கள் தடுப்புச் சட்டத்தில் டெங்குவை இணைத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டே தமிழக அரசுக்குகோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. தற்போது இந்த சட்டத்தின் அடிப்படையில் கரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தமிழக அரசு தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த சட்டத்தில் புதிதாக பல்வேறு திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும். அப்போதுதான் டெங்கு, கரோனா போன்ற கொள்ளை நோய்களில் இருந்து தமிழக மக்களை முழுமையாக காப்பாற்ற முடியும். இதுபோன்ற கொள்ளை நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பதுதான் உண்மையான சுகாதாரம். அதற்கு, அடிப்படையிலேயே சுற்றுச்சூழல் தூய்மை கல்வியை போதிக்க வேண்டும். மருந்துகளை நோக்கி மக்கள்செல்லும் நிலை மாறி, மக்களை நோக்கி மருந்துகள் செல்ல வேண்டும். பாம்புக் கடி, வெறிநாய்க் கடி போன்ற விஷ கடிகளுக்கும் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைக்க வேண்டும். தற்போது கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளையும் அந்தந்த கிராம பஞ்சாயத்துக்களே மேற்கொள்ளவும், அதற்கான நிதி ஆதாரத்தை உருவாக்கவும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும்பயணிகளுக்கு நோய் தொற்றுஉள்ளதா என்பதைக் கண்டறியும் சிகிச்சை முறைகளை நிரந்தரமாக்க வேண்டும். அதற்கு தொற்றுநோய்கள் தடுப்பு சட்டத்தின் கீழ்என்னென்ன நோய்கள் அடங்கும், எது மாதிரியான சிகிச்சை வழங்கப்பட வேண்டும், தனிமைப்படுத்துதலுக்கான வரையறைகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணம், மனநல ஆலோசனைகள், வழிமுறைகள், இழப்பீடு வழங்குவதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு ஆகியவை குறித்து இந்த சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, புதிதாக விதிகளை வகுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் வேறு எந்த தொற்றுநோய்கள் தாக்கினாலும் தைரியமாக எதிர் கொள்ளலாம்.
சமூக செயற்பாட்டாளர் பாடம் ஏ.நாராயணன்:
மும்பையில் பரவிய பிளேக் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம்-1897, 1, 2, 2ஏ, 3, 4 ஆகிய ஷரத்துகளைக் கொண்டுள்ளது. இந்த சட்டத்தின்படி காலரா, பிளேக், பன்றிக் காய்ச்சல் போன்ற கொடிய கொள்ளை நோய்களில் இருந்து மக்களைக்காப்பாற்ற அந்தந்த மாநிலங் களே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுவே சரியான தருணம்
இந்த சட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் திருத்தங்களை செய்துள்ளன. தமிழகத்திலும் இந்த சட்டத்தை பயன்படுத்த கடந்த 1949, 1957 ஆகிய காலகட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதன்பிறகு தமிழகத்தில் இந்த சட்டம் பயன்படுத்தப்பட்டதா என தெரியவில்லை. தற்போது கரோனாவை தடுக்க தமிழக அரசு இந்த சட்டத்தை பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. அதேநேரம் வருங்காலங்களில் நோய் தொற்றைதடுக்கும் வண்ணம் தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேற்கொள்வதற்கு, இந்த சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டுவர தமிழக அரசுக்கு இதுவே சரியான தருணம்.
இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.