

கேரளாவில் இருந்து ஈரோடு வந்த கூலித் தொழிலாளர்களுக்கு ஈரோடு மாவட்ட போலீஸார் உணவு அளித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பத்தினர் கூலி வேலை தேடி கேரளா சென்றிருந்தனர். 144 தடை உத்தரவு அமலானதைத் தொடர்ந்து, கடந்த 25-ம் தேதி இரவு 3 குழந்தைகள் உள்ளிட்ட 65 பேர் திருச்சூரில் இருந்து நடைபயணமாக தமிழக எல்லைக்கு வந்தனர்.
அங்கு மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், லாரி ஒன்றில் ஈரோடு மாவட்ட எல்லையான நொய்யல் வந்தனர். அவர்கள் 2 நாட்களாக உணவு இல்லாமல் தவித்திருந்ததை அறிந்த சென்னிமலை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், பெருந்துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, போலீஸாரும், பத்திரிகையாளர்களும் இணைந்து, தொழிலாளர்களுக்கு உணவு வழங்கினர்.
இதனிடையே, பெருந்துறை எம்எல்ஏ தோப்பு என்.டி.வெங்கடாலம் திங்களூர் அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்து, தொழிலாளர்கள் 65 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் லாரியில் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, சித்தோடு அருகே உணவின்றி தவித்த நரிக்குறவர்கள் 50 பேர், ‘ஹலோ சீனியர்ஸ்’ திட்டத்தின் கீழ் 96558 88100- என்ற எண்ணுக்கு, உணவுத் தேவை குறித்து தொடர்பு கொண்டனர். இதை அறிந்த எஸ்பி சக்தி கணேசன், ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் வகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
பெண் மரணத்தால் பீதி
கோபியை அடுத்த கவுந்தப்பாடியில், கரோனா தொற்று ஏற்பட்ட தாய்லாந்து நாட்டினர் தங்கியிருந்த பகுதியில் பணிபுரிந்த ரேஷன் கடை பெண் ஊழியர் ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். உயிரிழப்புக்கான காரணம் அறியப்படாத நிலையில், பெண் ஊழியர் வசித்த வீட்டை, கிருமிநாசினி தெளித்து சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதேபோல, ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் மூவருக்கு கரோனா தொற்று உள்ளதாக பரவிய தகவலின் அடிப்படையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்ற னர்.