

கால்நடை தீவனங்கள் தொடர்பாக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், தடையுத்தரவு காலத்தில் நகர பகுதிகளில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்.ஏ.சின்னசாமி கூறியது:
தருமபுரி ஆவின் ஒன்றியத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் ஆகும். ஆண்டுதோறும் கோடையில் தீவன பற்றாக்குறையால் ஓரிரு மாதங்கள் இயல்பாகவே பால் வரத்து பாதிக்கும். அப்போது விவசாயிகள் தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் போன்றவற்றை கால்நடைகளுக்கு கூடுதல் ஊக்கமாக கொடுப்பர். தற்போது, கரோனா வைரஸ் தொற்றால் அரசு 144 தடையுத்தரவு அறிவித்துள்ளது. இதனால், தவிடு உள்ளிட்ட கால்நடை தீவனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு, போலீஸ் நெருக்கடி உள்ளிட்ட சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.
தற்போது கோடை காலமாகவும் உள்ளது. கோடையில் இயல்பாகவே குறையும் பால் உற்பத்தி, தீவன தட்டுப்பாட்டால் மேலும் குறைந்து விடும். கடந்த சில நாட்களாக தருமபுரி ஒன்றியத்தில் நாளொன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் வரை தான் பால் கொள்முதல் ஆகிறது. தடையுத்தரவால் வீடுகளிலேயே அனைவரும் உள்ள நிலையில், நகரங்களில் பாலுக்கு அதிக தேவை ஏற்படுகிறது. அதேநேரம், பால் உற்பத்தி படிப்படியாகக் குறைகிறது. இன்னும் 15 நாட்களுக்கும் மேலாக தடை அமலில் இருக்கும். எனவே, தவிடு, புண்ணாக்கு, குச்சி தீவனம் போன்ற கால்நடை தீவனங்களை, அவற்றின் உற்பத்தி பகுதிகளில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி எடுத்துச் செல்லவும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர்களிலும் விவசாயிகள் இவ்வகை தீவனங்களை வாங்கிச் செல்ல போலீஸார் அனுமதிக்க வேண்டும். உரிய நேரத்தில் அரசு போதிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மீதமுள்ள தடை காலத்தில் நகரங்களில் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு கூறினார்.