Published : 29 Mar 2020 07:03 AM
Last Updated : 29 Mar 2020 07:03 AM

ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் சலுகைகளில் கடன் அட்டை தவணைக்கு 3 மாத அவகாசம் உண்டா?- வங்கித் துறையினர் விளக்கம்

சென்னை

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று முன்தினம் அறிவித்த கடன் தவணைகளுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பாரத ஸ்டேட் வங்கித்தலைவர் தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு 3 மாத சலுகை அளிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகள் அனைத்து கடன்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக கடன்அட்டை (கிரெடிட் கார்டு) நிலுவைத் தொகைகளுக்கு இந்த தவணைக் கால அறிவிப்பு பொருந்துமா என்ற பலரும் கேட்டு வருகின்றனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்த போதே, இதுதொடர்பாக அனைத்து வர்த்தக வங்கிகளின் இயக்குநர் குழு கூடி இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என தெரிவித்தது. வர்த்தக வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், சிறிய நிதி வங்கிகள், உள்ளூர் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இத்தகைய சலுகையை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகையானது வட்டியோ அல்லது தவணையோ ரத்து என பலர் கருதுகின்றனர். ஆனால் செலுத்த வேண்டிய தவணை மற்றும் அதற்குரிய வட்டித் தொகையை மூன்று மாதம் கழித்து செலுத்துவதற்குதான் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதம் கழித்து செலுத்துவதற்காக அபராத வட்டி விதிக்கப்படாது. 3 மாதம் கழித்து செலுத்துவதால் வாடிக்கையாளர்களின் கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது என்றும் வங்கியாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல பலருக்கும் வங்கிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமே சுலப தவணை தொகைகள் பிடித்தம் செய்யப்படுகின்றன. ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால் தங்கள் வங்கிக் கணக்கில் தவணை தொகை பிடித்தம் செய்யப்படாதா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த வங்கி அதிகாரிகள், கடன், வட்டி போன்றவற்றை 3 மாதம் கழித்து செலுத்துவதற்குப் பதிலாக வழக்கம் போல செலுத்திவிடலாம் என சிலர் கருதக் கூடும். தங்களது கணக்கில் பிடித்தம் செய்ய வேண்டாம், 3 மாதம் கழித்து பிடித்தம் செய்யலாம் என்பதை சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தெரிவித்தால், அதன்பிறகு அவரது கணக்கில் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகள் அனைத்து தனிநபர் (பர்சனல் லோன்) கடன்களுக்கும் பொருந்தும் என்று ஆடிட்டர் ஜி. கார்திகேயன் குறிப்பிட்டார். மார்ச் 1-ம் தேதி செலுத்த வேண்டிய கடன் தவணையில் இருந்து இதுபொருந்தும் என்றும் கடன்கள் மீதான வட்டித் தொகை வழக்கமான வட்டியாகவே வசூலிக்கப்படும். அபராத வட்டி ஏதும் 3 மாதம்கழித்து செலுத்துவதற்கு விதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய இந்த கடன் தொகை அனைத்தும் வாராக் கடனாக (என்பிஏ) கருதப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை 3 மாதங்களுக்குப் பிறகே வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது சலுகைதான். அதாவது 3 மாதம் கழித்து கடன், வட்டி தொகையை செலுத்துவதற்குத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட வங்கிகள் அனுமதிக்கும் பட்சத்தில் மட்டுமே செயல்பாட்டுக்கு வரும்என்றும் பெரும்பாலும் அனைத்துவங்கிகளும் இதை நடைமுறைப்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

வீட்டுக் கடன், தனி நபர் கடன்,கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்ட குறிப்பிட்ட கால வரையறையுடன் கூடிய அனைத்து கடன் தொகைகளுக்கும் இந்த சலுகைபொருந்தும். நுகர்வோர் பொருட்களான மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோக சாதனங்களான டிவி, பிரிட்ஜ், ஏசி உள்ளிட்டவை மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றுக்கு பெறப்பட்ட கடனுக்கும் இந்த சலுகை பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x