Last Updated : 28 Mar, 2020 05:33 PM

 

Published : 28 Mar 2020 05:33 PM
Last Updated : 28 Mar 2020 05:33 PM

கரோனா தொற்று சிகிச்சைக்கு 200 படுக்கைகளுடன் தயார் நிலையில் தென்காசி அரசு மருத்துவமனை

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நோயாளிகளை 3 வகைகளாக பிரித்து சிகிச்சை அளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று தீவிரம் அதிகம் உள்ளவர்களுக்கு வென்டிலேட்டர் வசதியுடன் சிகிச்சை அளிக்க ஒரு பிரிவு உட்பட பாதிப்பின் தீவிரத்துக்கு தகுந்தவாறு சிகிச்சை அளிக்க 3 பிரிவுகளாக இந்த சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

இந்தப் பிரிவில் பணியாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் உட்பட 40 பேர் உள்ளனர். மருத்துவக் குழுவினா் தங்குவதற்கு மருத்துவமனை மாடியில் தற்காலிக அறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளன.

இவர்கள் 4 நாட்கள் தொடர்ந்து சிறப்பு பிரிவில் பணியாற்றுவார்கள். அதன் பின்னர், அவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வேறு குழுவினர் தொடர் பணியில் ஈடுபடுவார்கள். அந்த பிரிவில் நியமிக்கப்பட்டவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே செல்ல முடியாது.

மருத்துவப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு தொற்று பரவாமல் இருக்க சுழற்சி முறையில் 4 குழுவினர் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த சிறப்புப் பிரிவில் யாரும் சிகிச்சையில் இல்லை என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் கூறினார்.

இதேபோல், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைகளிலும் சிறப்புப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

தென்காசி, கடையநல்லூரில் காய்கறி சந்தைகள் இட மாற்றம்:

கரோனா தொற்று பரவாமல் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்லும்போது, சமூக இடைவெளியை பிற்பற்ற வேண்டும் என்று அரசு அறிவித்தது. ஆனால், தென்காசி, கடையநல்லூர் காய்கறி சந்தைகளில் மக்கள் அதிக அளவில் கூட்டமாக கூடினர். பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் காவல்துறைக்கும், நகராட்சி அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதனால், தென்காசி காய்கறி சந்தை, மீன் சந்தை, கடையநல்லூர் தினசரி காய்கறி சந்தை ஆகியவை மூடப்பட்டன.

தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் நேற்று முதல் காய்கறி சந்தை செயல்படத் தொடங்கியது. இதேபோல், மீன், மட்டன், சிக்கன் உள்ளிட்ட இறைச்சி மார்க்கெட் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் செயல்படத் தொடங்கியது. இறைச்சி வாங்குவதற்கு நேற்று கூட்டம் குறைவாகவே இருந்தது. ஆனால், காய்கறிகள் வாங்க பழைய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு, வரிசையில் நின்று காய்கறி வாங்குவதற்காக வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. ஆனால், பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் வழக்கம்போல் கூட்டமாக நின்று காய்கறி வாங்கினர். இதையடுத்து, போலீஸார் வந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அதன் பின்னர், பொதுமக்கள் இடைவெளி விட்டு, வட்டங்களுக்குள் நின்று காய்கறி வாங்கிச் சென்றனர்.

இதேபோல், கடையநல்லூர் காய்கறி சந்தை மூடப்பட்டதால், இக்பால் நகா் தெப்பத்திடல், மாவடிக்கால் திருமண மண்டபம் அருகே, பேட்டை ஜலாலியா மஹால் அருகில், பேட்டை முஸ்லிம் பள்ளிக்கூடம் அருகில், மேலக்கடையநல்லூா் தேரடி திடல், முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயில், கிருஷ்ணாபுரம் மேல்நிலை நீா்தேக்க தொட்டி பகுதி ஆகிய 7 இடங்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறிகள், மீன், இறைச்சி ஆகியவை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக- கேரள போலீஸார் ஆலோசனை:

இதற்கிடையில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தமிழக, கேரள போலீஸ் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், திருவனந்தபுரம் டிஐஜி சஞ்சய் குமார் குர்தீன், கொல்லம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கர், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின்னர் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், செய்திளாளர்களிடம் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் அத்தியாவசமான பொருட்களான காய்கறிகள், பால், மருந்து பொருட்களை தங்குதடையின்றி அனுப்புவது குறித்தும், குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x