

ஒடிசா கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனைப் பணியில் இரண்டு தமிழர்கள் அதுவும் மதுரைக்காரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவர்களுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மதுரை மண்ணைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் இருவர், ‘கரோனா’ ஒழிப்பில் ஒடிசா மாநிலத்தின் முதுகெலும்பாக செயல்பட்டு வருவதோடு, அம்மாநிலத்தில் 1000 படுக்கைகளுடன் கூடிய இந்தியாவிலேயே மிகப்பெரிய ‘கரோனா’ மருத்துவமனையை உருவாக்கியுள்ளனர்.
அவர்களைப் பற்றி நன்கு அறிந்த மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், ’’ஒருவர் சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ். மற்றொருவர் அம்மாநில முதல்வரின் தனிச்செயலர், கார்த்திகேய பாண்டியன் ஐஏஎஸ். இருவரும் மதுரை மண்ணின் பெருமைமிகு வார்ப்புகள்.
நாடே கரோனாவில் விழிபிதுங்கிக் கொண்டிருக்கையில் அந்நோயை எதிர்கொள்ள இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஒடிசாவில் உருவாகி கொண்டிருக்கிறது. 1,000 படுக்கைகள் கொண்ட இந்த சிறப்பு மருத்துவமனை இன்னும் 15 நாட்களில் ஒடிசாவில் செயல்படத்துவங்கும்.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் 7 நாட்களில் 1000படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டதை ஆச்சரியத்துடன் பார்த்த நமக்கு இந்திய மண்ணில் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய சாதனை செய்யப்படுவது பெருமைக்குறிய விசயம்.
இச்சாதனையின் பின் புலமாக இருப்பவர்கள் ஆர்.பாலகிருஷ்ணன்,கார்திகேய பாண்டியன் ஆகியோர். இருவருக்கும் மதுரை மக்களின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
முதல் பேரிடர் மேலாண்மை கட்டுமானம்..
இந்தியாவில் முதன்முதலாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது ஒடிசா மாநிலத்தில்தான். 1999-களில் ஏற்ப்படுத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை கட்டமைப்பினால்தான் இன்றுவரை பல்வேறு பேரிடர்களை அம்மாநிலத்தால் திறம்பட கையாளாமுடிகிறது.
1999 -ம் ஆண்டு ஒடிசாவை தாக்கிய "சூப்பர் புயல்” 10,000 உயிர்களை காவுவாங்கியது. முழித்துக்கொண்ட அரசாங்கம் ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது. அதன் பிறகு பாலின், திட்லி, ஹூட்ஹூட் போன்ற புயல்களின் தாக்கத்தில் இருந்து ஒடிசா தப்பியதற்கு காரணம் இந்த பேரிடர் மேலாண்மை கட்டுமானங்கள்தான்.
சென்ற ஆண்டு ஒடிசாவை தாக்கிய பானி புயல் 10 நாட்களுக்கு மேலாக கடலில் இருந்து இந்திய வானியல் மையத்திற்கே மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரே நாள் இரவில் சுமார் 14 லட்சம் மக்களை கடற்கரை ஓரங்களில் இருந்து வெளியேற்றி உயிர் சேதத்தை குறைத்தது ஒடிசா மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை கட்டமைப்பு.