

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4482 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு, மற்றும் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விதிகளை மீறியதாக நூறு பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இவர்ளில் தொழிலாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், மீன்பிடி தொழிலாளர்கள் அடங்குவர்.
தற்போது கரோனா பாதிப்பால் வெளிநாட்டில் இருந்து வருவோர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து குமரியில் காவல் நிலையம் வாரியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வெளிநாட்டில் இருந்து வந்தோர் கணக்கெடுக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இதில் இன்று வரை வெளிநாட்டில் இருந்து வந்த 4482 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளில் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் வீட்டிற்கு வெளியே மாநகராட்சி, நகராட்சி, மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் தனிமைப்படுத்தப்பட்டதற்கான அடையாளம் காணும் நோட்டீஸை ஒட்டியுள்ளனர்.
சவுதி அரேபியா, சீனா, ஆஸ்திரேலியா, லண்டன், சிங்கப்பூர், இத்தாலி, மலேசியா, துபாய், அமெரிக்கா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அதிகம் இருப்பதால் கரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. இவர்களை சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் தினமும் கண்காணித்து வருகின்றனர்.