

கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தமிழகம் மற்றும் உலக மக்களைக் காக்கும் பொருட்டு பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலில் ஸ்கந்த ஹோமம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக முன்னெச்சரிக்கையாக பக்தர்கள் வருகைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதும் சுவாமிக்கு ஆறு கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
நாடு முழுவதும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திரதிருவிழாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுவரை இதுபோன்று பழநி கோயில் விழா ரத்துசெய்யப்பட்டதாக தகவல் இல்லை என்கின்றனர். பழநியில் வசிக்கும் முதியவர்கள்.
இந்நிலையில் பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில் நேற்று காலை ஹோம குண்டம் அமைக்கப்பட்டு ஸ்கந்த பூஜை நடைபெற்றது.
இதில் 108 மூலிகை பொருட்கள் கொண்டு ஸ்கந்த ஹோமம் நடத்தப்பட்டது. கோயில் ஸ்தானிக அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் முழுங்க ஹோமம் நடத்தினர். தொடர்ந்து உச்சிகாலபூஜையில் தண்டாயுதபாணிசுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
கரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தமிழகம் மற்றும் உலக மக்களை காக்கும் பொருட்டு ஸ்கந்த ஹோமம் நடத்தப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.