

கிராமங்களில் இருந்து வரும் துப்புரவு பணியாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை சொந்த செலவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தரத் தொடங்கியுள்ளார்.
கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. புதுச்சேரியில் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் மட்டுமல்லாமல் துப்புரவுப் பணியாளர்கள் ஏராளமானோர் பணியில் உள்ளனர்.
இதில் சாலைகள், தெருக்கள் தொடங்கி முக்கியப் பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபடுவோர் துப்புரவுத் தொழிலாளர்கள். நோயின்றி அனைவரும் வாழ தங்கள் வாழ்வைப் பணயம் வைத்துத் தூய்மைப் பணியில் எக்காலத்திலும் ஈடுபடும் இவர்களுக்கு முக்கியத் தேவை மதிய உணவு. பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளில் இருந்து நகரத்துக்கு வந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை உணவை வீட்டில் சாப்பிட்டு வந்தாலும், மதியம் உணவுக் கடைகள் இல்லாததால் பெரும் பாதிப்பு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஏற்படத் தொடங்கியுள்ளது.
இச்சூழலில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கிராமத்தில் இருந்து புதுச்சேரிக்கு துப்புரவுப் பணிக்கு வரும் தொழிலாளர்களுக்கு மதிய உணவை தனது சொந்த செலவில் தரத் தொடங்கியுள்ளார்.
துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களை தாசில்தார் ராஜேஷ்கண்ணா வழங்கத் தொடங்கினார்.
இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கிராமப்பகுதிகளில் இருந்து புதுச்சேரிக்குப் பணிக்கு வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் 1,200 பேருக்கு மதிய உணவை தனது சொந்த செலவில் முதல்வர் தரத் தொடங்கியுள்ளார். ஊரடங்கு அமலுக்கு உள்ள வரையில் மதிய உணவு தரப்படும்.
அதேபோல், மதிய உணவு தேவைப்படும் நரிக்குறவர்கள், சாலையோரம் உணவு தேவைப்படுவோருக்கும் என சுமார் 1,450 பேர் வரை தருகிறோம். மதிய உணவைத் தனியாக வீட்டில் பாதுகாப்புடன் தயார் செய்து முதல்வர் தரப்பில் இருந்து தருகிறார்கள். அதை நாங்கள் தருகிறோம்" எனத் தெரிவித்தனர்.