Published : 28 Mar 2020 02:06 PM
Last Updated : 28 Mar 2020 02:06 PM

ஊரடங்கைத் தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம்: மீனவர்களுக்கு தொடரும் சோதனை

ராமேசுவரம்

21 நாட்கள் ஊரடங்கைத் தொடர்ந்து வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட உள்ளதால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கடற்பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஏப்ரல் 14 வரையிலும் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கரோனோ தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் தமிழக விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களும் கடந்த மார்ச் 20-லிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இந்நிலையில் ஊரடங்கை தொடர்ந்து ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரையிலும் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்ததுள்ளது.

இது குறித்து ராமேசுவரம் மீனவர் பிரநிதி அருளானந்தம் கூறியதாவது:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலும் 45 தினங்கள் மட்டுமே மீன்பிடித் தடைக்காலமாக தமிழகத்தில் கடை பிடிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை 61 தினங்களாக இது அதிகரிக்கப்பட்டது. இந்தியக் கடற்பகுதி வெப்ப மண்டலக் கடற்பகுதி இதனால் வருடத்தின் பெருன்பான்மையான நாட்களில் மீன்கள் இனப்பெருக்கம் இருக்கும்.

இதில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் தான் மீனவர்கள் தங்கள் தலைமுறை தலைமுறையாக தாங்கள் தெரிந்து கொண்ட அனுபவ அறிவின் மூலம் தமிழகம் மற்றும் புதுவையில் மீன்கள் சினையுடன் உள்ள இனப்பெருக்க காலங்கள் ஆகும். சட்டமன்றத்தில் கடந்த ஜுலை 2019-ல் நடைபெற்ற மீன்வளத்துறை மானிய கோரிக்கை போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர்.

அருளானந்தம்

நவம்பர், டிசம்பருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். அறிவித்தபடி தமிழக அரசு மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர்-டிசம்பர் மாதத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் தற்போது மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் வாழ்வாதாரம் இழந்து இருப்பதால் மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும், என்றார்

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x