Published : 28 Mar 2020 01:06 PM
Last Updated : 28 Mar 2020 01:06 PM

கரோனா பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது; அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது: ஸ்டாலின்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 28) வெளியிட்ட அறிக்கையில், கரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது.

அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதில் மக்கள் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். நிவாரணத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கரோனா குறித்துப் பரப்பப்படும் தகவல்கள் மக்களை மனரீதியில் பாதித்துப் பதற்றமடைய வைத்திருக்கிறது.

இன்னும் எத்தனை நாளைக்கு முறையான வருமானமும் இல்லாமல் செய்யும் தொழிலையும் இழந்து இன்னலுக்கு ஆளாகி அவதிப்படுவோம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அன்றாடத் தனிமை வாழ்க்கையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை அறிந்து அவற்றுக்கு உடனுக்குடன் உரிய தீர்வு காண்பது அவசியம்.

கரோனோ நோய்த் தடுப்பில் மக்கள் இன்னும் உறுதியுடன் சமூகத் தொடர்பிலிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும் பீதியையும் தணிப்பதற்குரிய தகவல்களையும் அளித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

மக்கள் மனதில் உள்ள பதற்றம் தணிந்தால்தான், தனிமைப்படுத்துதல் முயற்சிக்கும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உரிய சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கும் பேருதவியாக இருக்கும்.

மக்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்தப் பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும். வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்தப் பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது.

அனைத்துக் கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபட வேண்டிய தருணம் இது. ஆகவே அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியைக் கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒரு கூட்டத்தைக் கூட்டுவதில் பிரச்சினை இருக்கும் என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் கலந்து ஆலோசனை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டினைச் செய்துகொண்டு, மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து, சரியான தரவுகளின் அடிப்படையில், அதற்கு ஏற்றவாறு கரோனா தடுப்புக்கு, ஜனநாயக ரீதியாக, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் முதல்வர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x