

தாய்லாந்து நாட்டிலிருந்து மதுரை வந்த 8 பேருக்கும் ‘கரோனா’ தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால், உயிரிழந்தவருக்கு யார் மூலம் இந்த நோய் பரவியது என்பது தெரியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயது கட்டுமான ஒப்பந்ததாரர் கடந்த வாரம் ‘கரோனா’ வைரஸ் காய்ச்சலுக்கு உயிரிழந்தார். தமிழகத்தின் முதல் கரோனா பலி மதுரையில் நடந்தது.
இவர் பாதிக்கப்படுவது வரை, தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து நேரடியாக தாயகம் திரும்பியவர்களுக்கும், அவர்களுடன் தொடர்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே இந்த வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
ஆனால், தமிழகத்தில் முதல் முதலாக வெளிநாடு செல்லாமல் வெளிநாட்டுத் தொடர்பு இல்லாமல் இந்த தொற்று நோய் பாதிக்கப்பட்ட முதல் நபராக இவர் கண்டறியப்பட்டதால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.
அவருக்கு எப்படி வைரஸ் காய்ச்சல் பரவியது என்ற விசாரணையில் அவர்கள் இறங்கினர். அப்போது அவரது குடும்ப உறுப்பினர்கள், அவர் தாய்லாந்தில் இருந்து மதுரை அண்ணாநகர் பகுதிக்கு வந்த 8 பேரை சந்தித்ததாக தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அந்த 8 பேரையும் தோப்பூரில் உள்ள தனிமை முகாமில் வைத்து அவர்களுக்கு மருத்துவர்கள் ‘கரோனா’ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதில், முதற்கட்டமாக இரு நாளுக்கு முன் 3 பேருக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு ‘கரோனா’ தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக மீதி 5 பேருக்கு ‘கரோனா’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இவர்களுக்கும் ‘கரோனா’ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
உயிரிழந்த மதுரை அண்ணா நகரை சேர்ந்தவரை சந்தித்ததாக கூறப்பட்ட தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேருக்கு தற்போது ‘கரோனா’ தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதால் உயிரிழந்தவருக்கு எப்படி இந்த தொற்று நோய் பரவியது என்பது தற்போது வரை தெரியவில்லை.
இந்நிலையில் நேற்று உயிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த 2பேருக்கு ‘கரோனா’ தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருந்த 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த அந்த நபர் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தவர். ஆனால், இறுதியாக அவர் நவம்பரில்தான் சென்று வந்துள்ளார். அவருக்கு வெளிநாட்டினர் நிறைய பேருடன் தொடர்பு இருந்துள்ளது.
ஆனால், அந்தத் தகவல் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கே சரியாகத் தெரிவில்லை. அவர்கள் மறைக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை.
மதுரையில் இந்த தொற்று நோய் பரவிய மூவரும், உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த நோய் சமூகப் பரவலாக பரவிவிட்டதோ என்றும் அஞ்சப்படுகிறது, ’’ என்றனர்.