

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீதான தாக்குதல் முயற்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் மீதான தாக்குதல் முயற்சி காவல் துறையின் நடவடிக்கைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
திருமாவளவன் வரும் வழியில் பெட்ரோல் குண்டுகளோடு வன்முறையாளர்கள் காத்திருந்தார்கள் என்ற செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
வன்முறையாளர்களின் இத்தகைய முயற்சிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் கண்டிப்பதுடன், வன்முறை முயற்சிகளுக்கு பின்னால் உள்ள அனைவரையும் கைது செய்து உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அத்துடன், தொல்.திருமாவளவன் பயணங்களில், நிகழ்வுகளில் கூடுதல் பாதுகாப்புகள் அளிக்க அரசை வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.