

சென்னையில் தவித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உதவியதற்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டெரிக் ஓ பிரையன் இன்று (மார்ச் 28) தன் ட்விட்டர் பக்கத்தில், "சென்னையில் தவித்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைத் தொடர்புகொண்டு தெரிவித்தோம். இதனையடுத்து, அவரது குழுவினர் அவர்களுக்குத் தேவையான உதவிகளை நேரில் சென்று வழங்கினர். நன்றி. 'பெருங்கடலில் ஒரு சிறு துளி'. இது, தமிழ்நாடு-மேற்கு வங்க மாநிலங்களின் கூட்டுப்பணி" என்று பதிவிட்டுள்ளார்.
டெரிக் ஓ பிரையனின் இந்தப் பதிவுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "நன்றி, டெரிக் ஓ பிரையன் மற்றும் மம்தா பானர்ஜி!
இதுபோன்ற காலங்களில், அனைத்து மாநிலங்களும் எல்லைகள் - கட்சி சார்புகளைக் கடந்து பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு உதவ வேண்டும்.
திமுகவின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், தொண்டர்களும் தேவையில் உள்ளோருக்கு உதவிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.