

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு இதுவரை மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அவா்களில், 12,955 பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனா்.
274 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 1,143 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், 1067 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந்துள்ளது. 41 மாதிரிகள் சோதனையில் உள்ளன. 38 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்றிரவு நிலவரப்படி தமிழகத்தில் 38 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஒருவா் சிகிச்சைக்குப் பின்னா் குணமடைந்துள்ளார். 41 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 35 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி. அடுத்த நபர் 61 வயதான ஆண், இவர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர். மூன்றாவது நபர் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது நபர்.
இந்நிலையில் இன்று காலை பொது சுகாதாரத்துறை அறிவிப்பின்படி மேலும் இரண்டு பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. மேற்கு இந்தியத் தீவுகளிலிருந்து திரும்பிய 42 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த நபர் 49 வயதான நபர் இங்கிலாந்திலிருந்து வந்தவர். காட்பாடியைச் சேர்ந்த இவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் இருவரும் மத்தியக் கிழக்கு நாடுகளைக் கடந்து வந்தவர்கள் என்று பொது சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் தொற்று எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் 2 பேர் சிகிச்சையில் உடல் நலம் தேறிவிட்டதாலும், ஒருவர் உயிரிழந்ததாலும் எண்ணிக்கை தற்போது 37 ஆக உள்ளது.