Published : 28 Mar 2020 11:07 AM
Last Updated : 28 Mar 2020 11:07 AM

வெளியில் சுற்றினால் வாகனம் பறிமுதல் சரியா? 144 சட்டம் என்ன சொல்கிறது? பேரிடர் மேலாண்மைச் சட்டம் அமலாகுமா?- மூத்த வழக்கறிஞர் விளக்கம்

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பேரிடர் மேலாண்மைச் சட்டம், ஊரடங்குச் சட்டம், 144 தடை உத்தரவு என பல சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன் வகைகள் என்ன? வரும் காலங்களில் சட்டம் கடுமையாகுமா? பொதுமக்கள் மீது பாயும் சட்டம் சரியா? என்பது குறித்த அலசல் பேட்டி.

இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை, பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ரமேஷ் நடராஜனிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேட்டோம்.

தொற்று நோய் பரவுதல் சட்டம் (Epidemic disease act) என்கிறார்களே. அது என்ன? அதில் எத்தனைப் பிரிவுகள் உள்ளன?

தொற்று நோய் சம்பந்தமாக இந்திய தண்டனைச் சட்டத்தில் 269, 270 ஆகிய பிரிவுகள் உள்ளன. பிரிவு 269-ன் கீழ் தொற்று நோயை கவனக்குறைவாக மற்றவர்களுக்குப் பரப்புபவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை கிடைக்கும். தொற்று நோயை வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் மற்றவர்களுக்குப் பரப்பினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை என்று 270-வது சட்டப் பிரிவு சொல்கிறது.

இது தனிப்பட்ட நபர்களுக்காகக் கோண்டுவரப்பட்டது. பெரிய அளவில் இதை அமல்படுத்தமுடியாது. 1897-ல் தொற்றுநோய் பரவுதல் சட்டம் (Epidemic disease act) ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது. தொற்று நோய் பரவுவதைத் தடுக்க கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தில் மொத்தமே 5 பிரிவுகள்தான் உள்ளன.

இதில் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் கொடுத்து வருகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் விமான நிலையங்கள் கிடையாது. துறைமுகங்கள்தான். அப்போது வருபவர்களைக் கட்டுப்படுத்த, போக்குவரத்தை நிறுத்த, கடைகளை மூட, ஷாப்பிங் மால்களை மூட தொற்று நோய் பரவல் சட்டம் கொண்டு வரப்படுகிறது.

தொற்று நோய் பரவுதல் சட்டத்தைப் பின்பற்ற மறுத்தால்?

(Epidemic disease act) தொற்று நோய் பரவுதல் சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் உத்தரவுகளை மதிக்கத் தவறினால் அங்குதான் ஐபிசி 188 வருகிறது. உத்தரவுகளுக்குக் கீழ்படிய மறுத்தல், மீறுதல் என்கிற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அதைத்தான் போலீஸார் அமல்படுத்துகிறார்கள்.

(Epidemic disease act)-ன் கீழ் 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரணமாக மீறினால் 6 மாதம் தண்டனை, வேண்டுமென்றே சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு ஓராண்டு வரை தண்டனை உண்டு. அபராதம் குறைவுதான். அந்தக் காலத்தில் பெரிய அளவில் தெரிந்த தொகை, 500, 1000 ரூபாய். இப்போது அந்த அபராதம் சாதாரணமாக உள்ளது.

144, Epidemic desease act இதற்கு முன் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாறு உண்டா?

Epidemic disease act- ஐ அல்லது 144-ஐ இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்பட்டதாகவோ அமல்படுத்தப்பட்டதாகவோ நடந்ததே இல்லை. அந்தந்த பகுதிகளில் சட்டத்தைப் பயன்படுத்தியதாக செய்தி படித்துள்ளோம். ஆனால் இந்தியா முழுமைக்கும் Epidemic disease act பயன்படுத்தப்பட்டது இதுதான் முதல் முறை.

அதேபோன்று 144 தடை உத்தரவும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் சாதி, மதச் சண்டை, சொத்து தகராறு வேறு ஏதாவது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும்போது நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மக்கள் கூடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்படும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இது அமல்படுத்தப்படுகிறது. இதில் மீறினாலும் 188 ஐபிசியின் கீழ் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

144 சாதாரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்காகத்தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. தொற்று நோய்க்காக 144 பயன்படுத்தப்படுவது அதுவும் நாடு முழுவதும் என்பது இதுதான் முதல் முறை.

144 உத்தரவைக் கடந்து ஊரடங்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்களே?

ஊரடங்கு என்று அறிவிக்க எந்தப் பிரிவும் தனியாக இல்லை. ஊரடங்கு, கர்ஃப்யூ என்பதெல்லாம் நாம் பயன்படுத்துகிற வார்த்தைகள். இதற்காக தனியாக எந்தச் சட்டமும் இல்லை. அனைத்துமே 144 பிரிவின் கீழ்தான் வரும். ஊரடங்கு என்று எங்கு வரும் என்றால் பொதுவாக ராணுவக் கட்டுப்பாடு உள்ள இடங்கள், கலவரம் பெரிதாக நடந்து போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில்தான். ஊரடங்கு என்றால் ஊரே அடங்கிவிடும். யாரும் வெளியே வரக்கூடாது. மீறி வந்தால் சுட்டுக்கொல்லக்கூட அனுமதி உண்டு.

144 என்றால் 4 பேருக்கு மேல்தான் கூடக்கூடாது. ஆனால் ஊரடங்கில் வெளியே வரவே கூடாது என்கிறார்களே. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

அதுபோன்ற வித்தியாசங்கள் புதிதாக நாமாக சொல்வதுதானே தவிர, ஊரடங்கு, கர்ஃபியூ, 144 எல்லாம் சாதாரணமாக நிலைமையைக் கட்டுக்குள் எடுத்துவர அந்ததந்த அரசாங்கங்களுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம்தான். நிர்வாக ரீதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர 144-ல் சட்டவிரோதமாக கூடக்கூடாது என்றால் 4 பேர், 2 பேர், ஒருவர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. வெளியே வரக்கூடாது என்றால் வரக்கூடாதுதான்.

அப்படியானால் இதை எப்படித்தான் அழைப்பது?

144, ஊரடங்கு என்று அழைப்பதைவிட லாக் டவுன் என்று சொல்லலாம். நீங்கள் வெளியே வரவே கூடாது என்று அரசு சொல்லவில்லை. அவசியமான விஷயங்களுக்காக வெளியே போகலாம், பொருட்கள் வாங்கலாம். ஒருவருக்கு ஒருவர் தூரமாக இருங்கள் சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள் என்று சொல்கிறார்கள். அனாவசியமாக வெளியே வரக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். இது கட்டுப்படுத்தும் நடவடிக்கை மட்டுமே.

இதைப் பயன்படுத்திதான் அவரவர்கள் ஆயிரம் காரணம் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்களே?

இதில் 144 அறிவிக்கப்பட்ட பின் அத்தியாவசியத் தேவைகள், பொருட்கள் போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டவை மட்டுமே செயல்படலாம். அனுமதிக்கலாம் என 144 சொல்கிறது. அதன்படி வெளியே செல்லலாம் என அறிவிக்கிறது. அதை மீறும்போது சுற்றும்போது வாகனங்களைப் பறிமுதல் செய்வது, வழக்குப் பதிவு செய்வது சரியான ஒன்றுதான்.

இதைத் தவிர பேரிடர் மேலாண்மைச் சட்டம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதே?

மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்டம். இதில் பேரிடர் மேலாண்மைக் குழு என்றெல்லாம் உண்டு. 2005-ல் கொண்டு வரப்பட்டாலும் 2011-ல் தான் முழுமையாக அமலுக்கு வந்தது. குழுவுக்கு தேசிய அளவில் தலைவராக பிரதமர் இருப்பார்.

மாநிலத்தில் முதல்வர்கள் இருப்பார்கள். நிர்வாகக் குழு இருந்தால் தலைமைச் செயலர்தான் அதன் தலைவர். மாவட்ட அளவில் மாவட்ட நடுவர்கள் என்பார்கள். ஆட்சியர்கள் அந்த அந்தஸ்தில் கருதப்படுவார்கள். சென்னையைப் பொறுத்தவரை காவல் ஆணையர்தான் மாவட்ட நடுவர் பொறுப்பு. 144 க்கும் இது பொருந்தும். அந்தச் சட்டத்தின் கீழ்தான் அனைத்தும் வழங்கப்படுகிறது.

எதற்காக இந்தச் சட்டம்?

இது 2004 சுனாமியின்போது பேரிடர் காலத்தில் நெருக்கடியான நேரங்களில் உடனடியாக மக்களுக்குப் பரிகாரம் கிடைக்க கொண்டுவரப்பட்டது. தற்போது இது கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பேரிடராகக் கருதுவதால் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது 144 சட்டம் உள்ளது, பேரிடர் மேலாண்மைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிலும் நடவடிக்கை எடுக்க சில சட்டங்கள் உள்ளன. குழப்பமாக உள்ளதே?

மாநில அரசு 144 சட்டம் போட்டுள்ளது. அதையெல்லாம் மீறி மத்திய அரசு இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் காரணம் இதுவும் 144 மாதிரிதான். அதன் கீழ் தான் கடைப்பிடிக்கச் சொல்கிறது. இது தேசிய அளவில் பேரழிவாகத்தான் மத்திய அரசு கருதுகிறது. மேலாண்மைச் சட்டத்தின் தலைவர் பிரதமர். அவர் மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க சில பிரிவுகள் உள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 62-வது பிரிவு இதற்கு வழிவகை செய்கிறது. அதன் கீழ்தான் பிரதமர் மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பித்து வருகிறார்.

இதை மீறினால் என்ன தண்டனை என்பது குறித்து மேலாண்மைச் சட்டம் 51 சொல்கிறது. அதன்படி பணியாவிட்டால் என்ன தண்டனை என்பதை 188 ஐபிசி போல்தான் 51-ம் சொல்கிறது. அதில் 6 மாதம், 1 வருடம் தண்டனை என்றால் மேலாண்மைச் சட்டப்படி மீறினால் அப்படியே இரட்டிப்பு, 1 வருடம், 2 வருடம் தண்டனை கிடைக்கும்.

இதில் மேலும் கடுமையான சட்டம் எதுவும் உள்ளதா?

ஆமாம். பேரிடர் மேலாண்மைச் சட்டம் வந்துவிட்டால் அதை அமல்படுத்த இன்சிடண்ட் கமாண்டர் எனும் பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை அமல்படுத்த அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மாவட்ட அளவில் ஆட்சியரும், சென்னையில் காவல் ஆணையரும் இன்சிடெண்ட் கமாண்டராக இருப்பார்கள்.

இவர்களுக்குக் கீழ் நிர்வாக நடுவர்கள் வருவார்கள். இது மாவட்ட அளவில் தாசில்தார்களும், சென்னை போன்ற நகரங்களில் துணை ஆணையர்களும் இருப்பார்கள். இவர்கள்தான் அனைத்துக்கும் அனுமதி அளிப்பார்கள். எது எது அத்தியாவசிய நடவடிக்கை, அத்தியாவசியப் பொருட்கள், அத்தியாவசியப் போக்குவரத்து எது என்பதை இவர்கள்தான் தீர்மானிப்பார்கள். அனுமதி அளிப்பார்கள். இவர்கள்தான் பாஸ் வழங்க வேண்டும்.

அப்படி எதுவும் இல்லாமல் சாதாரணமாக வெளியில் பொதுமக்கள் திரிகிறார்களே?

ஆமாம். அப்படி என்றால் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை என்றுதான் அர்த்தம். அத்தியாவசியமான போக்குவரத்துக்கு பாஸ் வழங்கும் நிலை வரும். நிலைமை இன்னும் அந்த அளவுக்கு தீவிரமாகவில்லை. 51-வது பிரிவிலிருந்து 60-வது பிரிவு வரை மேலாண்மைச் சட்டமும் 188 தவிர கூடுதலாகப் பாயும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் மாநிலங்கள் அலட்சியம் காட்டினால் என்ன செய்வது?

அதற்கும் பிரிவு 51 லிருந்து 60 வரை இடம் இருக்கிறது. மாநில அரசுகள் சரியாகச் செயல்படாமல் அலட்சியமாக இருந்தால் மாநில அரசு மீதும் நடவடிக்கை எடுக்கலாம். ஏதாவது ஒரு துறை இதை கடைப்பிடிக்காமல் இருந்தால் துறையின் தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தில் வழிமுறைகள் உண்டு.

இன்றுள்ள நிலையில் நிலைமை தீவிரமானால் போலீஸ் நடவடிக்கையும் தீவிரமாகுமா?

ஆமாம். அப்படித்தான் அதிகமாக வேண்டும். ஆரம்பத்திலேயே போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதரணமாக நடப்பவர்கள் சட்டத்தை மீறுவார்கள். ஆகவே வாகனப் பறிமுதல், வழக்கு போன்றவை அவசியம்.

சாதாரணமாக எனக்கு அவசியத் தேவைக்காக வெளியில் போக வேண்டும் என்றால் பிரச்சினை என்பதும் சிக்கல்தானே?

பெரும்பான்மை மக்களின் நலனை இதுபோன்ற நேரத்தில் பார்க்கவேண்டி உள்ளது. இத்தாலியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தில் பயணிக்கலாம் என்கிறார்கள். அதுபோன்று அவசியத் தேவைக்களுக்காக உங்களுக்கு அருகில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்குள் செல்லலாம். ஒரு பொருள் வாங்கப்போகிறேன் என்பதற்காக பல கிலோ மீட்டர் சுற்றுவது எப்படி சரியாக இருக்கும்?

போலீஸார் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறார்களே. அது சரியா?

அது முற்றிலும் சரியல்ல. போலீஸ் குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை இந்த நேரத்தில் எடுக்க வேண்டும். உங்களுக்கு அதிகாரமில்லை, மக்கள் அறியாமல் திடீரென செய்கிறார்கள் என்றால் சரி. இதுபோன்று தெருவில் அல்ல முக்கிய சாலையில் கையெடுத்துக் கும்பிடுவது சரியல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

போலீஸ் கடுமை காட்டினால் பீதி கிளப்புவதாக ஆகாதா?

ஆகாது. பீதி கிளப்புவது என்றால் தெலங்கானா, வட மாநிலங்களில் சாலையில் வரும் அனைவரையும் லத்தியால் தாக்குகிறார்களே அப்படிச் செய்தால்தான் பீதியாகும். போலீஸ் சட்டத்தைக் காக்க சில சட்டத்துக்குட்பட்ட நடவடிக்கைகள் எடுப்பது அவசியம். வாகனம் பறிமுதல், குறிப்பிட்ட இடத்தில் சில மணி நேரம் நிறுத்தி வைப்பது, வழக்குப் போடுவது என்று இருந்தால் அவசியமில்லாமல் ஊர் சுற்றுபவர்கள் வெளியில் வரமாட்டார்கள்.

போலீஸ் நிச்சயமாக தடுப்பார்கள். நடவடிக்கை வரும், வாகனம் பறிமுதல் என்றால் பொதுமக்கள் வெளியில் வரமாட்டார்கள். வன்முறை தேவையில்லை. அவசியமின்றி வந்தால் நடவடிக்கை வரும் என்கிற எண்ணத்தை மக்கள் மனதில் பதிவு செய்தாலே மக்கள் முழுமையாக கடைப்பிடிப்பார்கள். அது போதும்.

பொது மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அரசு யாரையும் வெளியே வரவே கூடாது என்று சொல்லவில்லை. விதிவிலக்குகளை அரசு கூறியுள்ளது. அவசரத் தேவை முக்கியமான பொருள் வாங்க வேண்டும் என்றால் ஒருவர் தனியாக வெளியில் சென்று வாங்கிவிட்டு உடனடியாகத் திரும்ப வேண்டும். அது அவசரத்துக்கு வெளியில் செல்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

எல்லோரும் வெளியில் சுற்றினால் அவசியத் தேவைக்கு வெளியில் வருபவர்களை அது பாதிக்கும். சுயக் கட்டுப்பாடு முக்கியம். பொது நலனுக்காகத்தான் அரசு கூறியுள்ளது. அரசு யாரையும் தடுக்கவோ, யாரையும் கொடுமைப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை. யார் சுதந்திரத்தையும் பறிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

பொதுமக்கள் தானாக முன் வந்து ஒத்துழைக்க வேண்டும். ஒத்துழைப்பு என்றால் நீங்கள் வெளியில் வராமல் இருப்பதுதான் ஒத்துழைப்பு. ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருப்பதுதானே ஒத்துழைப்பு.

இவ்வாறு மூத்த வழக்கறிஞர் ரமேஷ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x