Published : 28 Mar 2020 10:23 AM
Last Updated : 28 Mar 2020 10:23 AM

கரோனாவுக்கு நடுவில் கள்ள மது!- கதிகலங்கும் குமாரபாளையம்

ஊரடங்கு உத்தரவு, ஒருவேளை கரோனா பரவலையே கட்டுப்படுத்தினாலும் டாஸ்மாக் சரக்கை மட்டும் கட்டுப்படுத்த முடியாது போலிருக்கிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இதை நன்றாகவே உணர முடிகிறது. குமாரபாளையம் நகரப் பகுதி மட்டுமல்லாமல், கிராமப்புறப் பகுதிகளிலும்கூட கள்ளச் சந்தையில் மது பாட்டில்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

டாஸ்மாக் கடையில் 100 ரூபாய் விலையுள்ள குவாட்டர் பாட்டில், ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாள் இங்கு 200 ரூபாய்க்குக் கிடைத்தது. அடுத்த நாள் அது 300 ரூபாய்க்கு எகிறியது. இன்றைய தேதிக்கு 400 ரூபாய் ஆகியிருக்கிறது. இப்படி மளமளவென விலை ஏறினாலும், மதுப் பிரியர்கள் தொடர்ந்து இங்கே வந்து தாகசாந்தி செய்துகொண்டே இருக்கிறார்கள்.

எப்படி இங்கே மட்டும் இந்த அளவு மது பாட்டில்கள் கடைவிரிக்கப்படுகின்றன என விசாரித்தேன். வந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

குமாரபாளையம் நகர்ப் பகுதியில் மட்டும் 12 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இவை தவிர தட்டாங்குட்டை, குப்பாண்டம்பாளையம், தத்தேரி ஊராட்சிகளிலும் கடைகள் உள்ளன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளன்று அதிகாலை 4.30 மணிக்கு இங்குள்ள டாஸ்மாக் மதுக் கடைகளுக்கு மட்டும் ஆறரை லோடு சரக்குகள் ஒரே நேரத்தில் வந்திறங்கியிருக்கின்றன. அடுத்த நாள் முதல் கடை 21 நாட்களுக்கு விடுமுறை என்ற நிலையில், இவை எதற்காக வந்திறங்குகின்றன என்று பலரும் குழம்பியிருக்க, இறக்கப்பட்ட சரக்குகள் வேனிலும், மினி ஆட்டோக்களிலும் ஏற்றப்பட்டு உள்ளூரில் பல்வேறு முக்கியஸ்தர்களின் குடோன்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

குமாரபாளையத்தில் விசைத்தறிகள் அதிகம் என்பதால், அதற்கான குடோன்கள் இங்கே நிறைய உண்டு. இந்நிலையில், குமாரபாளையத்தில் உள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவரின் குடோனில் மட்டும் ஏழெட்டு மினி ஆட்டோவில் சரக்குகள் இறக்கப்பட்டுள்ளன. அவைதான் மறுநாள் முதல் வெவ்வேறு வீடுகளிலும், தறி குடோன்களிலும் பதுக்கப்பட்டு, பரம ரகசியமாக சப்ளை செய்யப்படுவதாகச் சொல்கிறார்கள் ஊர்ப் பிரமுகர்கள்.

இதுகுறித்து குமாரபாளையம் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் பேசினேன். “ஆரம்பத்திலேயே நாங்கள் சந்தேகப்பட்டோம். ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர் முன்னிலையிலேயே நடந்ததால் அதைக் கேட்க யாருக்குமே தைரியமில்லை. மதுப் பிரியர்கள் எந்த இடத்திலும் மது அருந்தாமல் இருக்க முடியாது. அப்படிப்பட்டவர்களை இனங்கண்டு, ஒருவருக்கொருவர் ‘லிங்க்’ செய்தே இந்த பாட்டில்களை விற்கிறார்கள். இந்தச் சரக்குகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் கொண்டுசெல்லப்படுகின்றன. அப்படி சென்றபோது உள்ளூர் இன்ஸ்பெக்டர் ஒருவர் ஒரு மினி ஆட்டோ நிறைய சரக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்.
ஒரு கேஸில் 48 பாட்டில்கள் இருக்கும். அந்த ஆட்டோவில் மொத்தம் 50 கேஸ்கள் இருந்திருக்கின்றன.

ஆனால், இது பற்றி ஊடகங்களில் செய்தியே வரவில்லை. வழக்குப் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரைக் கேட்டால், ‘அதைப் பிடித்தவுடன் மது ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைத்து விட்டோம். அவர்கள் வழக்குப் போட்டிருப்பார்கள்’ என்று நழுவுகிறார். இது முழுக்க முழுக்க கூலிக்காரர்கள், அன்றாடங்காய்ச்சிகள் இருக்கிற நகரம். இங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மது விற்கப்படுவதால், பல குடும்பங்கள் பாதிக்கப்படும்” என்று வேதனைப்பட்டார் அவர்.

குடிமக்களுக்கான இந்த ரகசிய சேவை குமாரபாளையத்தில் மட்டும்தான் நடக்கிறதா, பிற இடங்களிலும் நடந்துகொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆளுங்கட்சியினரே இதைச் செய்வதால் மாநில அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

எனவே, மத்திய அரசு இதை உன்னிப்பாகக் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், கரோனாவை விட, மதுவால் நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்கள் அதிகரித்துவிடும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x