

திருச்சி மாவட்ட பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து, கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் என்.நடராஜன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் என்.நடராஜன்,எஸ்.வளர்மதி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் என்.நடராஜன் கூறியது:
கரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கரோனா தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரப் பெறும் புகார்களை சிறப்புக் குழுவினர் கேட்டு உரிய தீர்வுகளை வழங்குகின்றனர். இதுவரை 195 புகார்களுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகள், மாநிலங் கள், மாவட்டங்கள் வழியாக திருச்சி மாவட்டத்துக்கு வந்த 4,120 பயணிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனிமைப்படுத் தப்பட்ட வீடு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மாநக ராட்சிப் பகுதியில் 3, நகராட்சிப் பகுதியில் 3 பேரூராட்சிப் பகுதியில் 16, ஒன்றியப் பகுதிகளில் 14 என மொத்தம் 36 சமுதாய உணவகங்கள் அமைக்கப்படவுள்ளன.
தமிழக முதல்வர் அறிவுறுத்தியவாறு பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து கரோனா பரவாமல் தடுக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
‘முகக் கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்’
திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
சளி, காய்ச்சலுடன் கடந்த 22-ம் தேதி துபாயிலிருந்து திருச்சி வந்த, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் நல்ல நிலையில் உள்ளார். விமானத்தில் அவரது அருகில் அமர்ந்து வந்த திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா தனி வார்டில், நேற்றைய நிலவரப்படி 5 பேர் கிசிச்சையில் உள்ளனர்.
கரோனா வைரஸ் தடுப்பு குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர். எனவே, காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மார்க்கெட் மார்ச் 30-ம் தேதி முதல் திருச்சி பொன்மலை ஜி-கார்னர் மைதானத்துக்கும், திருச்சி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் பள்ளி மைதானங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கும் மாற்றப்பட்டுள்ளன. இதேபோல, துறையூரில் செயல்படும் காய்கறி சந்தை, மார்ச் 28 (இன்று) முதல் ஜமீந்தார் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்படும்.
கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அனைவரும் அரசின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும். வீட்டுக்குள் இருக்க வேண்டும். அத்தியாவசிய காரணம் இல்லாமல் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. குறிப்பாக முகக்ககவசம் அணியாமல் எவரும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றார்.