

கரோனா பாதிப்புக்கு சிகிச்சை இருப்பதாக தவறான தகவல் வெளியிட்டாலோ, தவறான எச்சரிக்கை விடுத்தாலோ அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு செய்தார். அதன் தொடர்ச்சியாக 144 தடை உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதிவரை நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டத்தில் தமிழக முதல்வர், சமூக விலகல் மற்றும் வீட்டில் தனிமைப்படுத்துதலில் முழு கவனம் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில், மாவட்ட ஆட்சியர்கள், 375 துணை ஆட்சியர்கள், 1,131 தாசில்தார்கள், 1,133 துணை தாசில்தார்கள், 1,150 வருவாய் ஆய்வாளர்கள், 10,104 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் அலுவலர்கள் 15,162 பேர் உட்பட ஒட்டு மொத்தமாக 29,000-க்கும் மேற்பட்ட வருவாய்த் துறையினர், பேரிடர் தொடர்பாக செயல்படும் அனைத்து துறையினர், சுகாதாரத் துறையினருடன் இணைந்து கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் முக்கியமான பணி என்பது, தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வந்த 18,912 பேரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தினோம். தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதல்வர் அளித்த உத்தரவின்படி, குடியுரிமைத் துறையின் மூலம், நாடு முழுவதும் எவ்வளவு பேர் மார்ச் 1-ம் தேதி வந்துள்ளார்கள் என்று பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பிப்ரவரி 15-ம் தேதியில் இருந்து வெளிநாடுகளில் இருந்து வந்து வேறு மாநிலத்தில் இறங்கி, ரயில், பேருந்து மூலம் தமிழகம் வந்தவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களின் முகவரியைக் கண்டறிந்து 96,663 பேரது வீடுகளுக்கு, சுகாதாரம், வருவாய், காவல்துறை, உள்ளாட்சித் துறையினர் சென்று வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்கான அறிவிப்பை ஒட்டி வருகின்றனர். இப்பணிகள் விரைவில் முடிவடையும்.
மேலும், இந்த அறிவிப்பைக் கேட்டதும் தானாக முன்வந்து அவர்களே தங்கள் விவரங்களை 104, 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். இதுமட்டுமின்றி, மற்ற மாநிலங்களின் எல்லை சீல் செய்யப்பட்டிருந்த போதிலும், ஏற்கெனவே வந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு கடைபிடிக்கும்போது, அதை மீறுபவர்கள் மீது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் எவ்வித தட்டுப்பாடின்றி கிடைக்க, நாள் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து வருகின்றனர். முதல்வர் 9 குழுக்களை அமைத்து அக்குழுக்களும் கண்காணித்து வருகின்றன. சமூக விலகல் மூலம் நம்மை தனிமைப்படுத்துவது அவசியம். அதை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தவறான சிகிச்சை, தவறான எச்சரிக்கை விடுத்தல், அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுப்பது, நிறுவனங்கள் போதிய நடவடிக்கை எடுக்காதது போன்வற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வரக்கூடாது. குடியிருப்போர் நலச் சங்கங்களும் இதை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.