

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கிராமத்தில் கரோனா அறிகுறி காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்ட இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். தமிழ்நாடு முழுவதும் வெளிநாட்டில் இருந்து திரும்பிய சுமார் 60 ஆயிரம் பேர் அவர்களது வீடுகளிலும், சில நூறு பேர் அதற்கான மையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சூழலில், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை மன அழுத்தத்தில் இருந்து மீட்பதற்கு உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஎச்ஓ) சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இதுகுறித்து, ஓமனில் மருத்துவராக பணிபுரியும் சிவகங்கையைச் சேர்ந்த சென் பாலன் கூறியதாவது: பேரிடர் காலங்களில் வருத்தம், மன அழுத்தம், குழப்பம், பயம் அல்லது கோபம் போன்றவை இயல்பானவையே. இவற்றைத் தவிர்க்க நம்பிக்கைக்கு உரியோரிடம் பேசுவது உதவும். நண்பர்களையும், குடும்பத்தினரையும் நாடுங்கள்.
கட்டாயமாக வீட்டுக்குள்ளேயே இருக்க நேர்ந்தால் ஆரோக்கியமான உணவு, உறக்கம், உடற்பயிற்சி, வீட்டில் உள்ளோருடன் நேரம் செலவழித்தல், நண்பர்கள், உறவினர்களை தொலைபேசி, மின்னஞ்சல் வழி தொடர்பு கொள்ளுதல் என ஆரோக்கியமான வாழ்வியலைப் பின்பற்றவும்.
போதை வேண்டாம்
தனிமையை சமாளிக்க புகை பிடித்தல், மது அருந்துதல் உட்பட மற்ற போதை மருந்துகளை உபயோகப்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். உங்களால் இயலவில்லை எனும்போது சுகாதாரப் பணியாளரையோ, மனநல ஆலோசகரையோ அணுகவும்.
உண்மைத் தகவல்களை அறிந்துகொள்ளுங்கள். உலக சுகாதார நிறுவனத்தின் இணைய தளம், உள்ளூர் அல்லது மாநிலத்தின் பொது சுகாதார அமைப்புகள் போன்றவற்றில் இருந்து நம்பகமான செய்திகளை பெறும் வழிமுறையை உறுதி செய்யுங்கள்.
ஊடகங்களில் வரும் செய்திகள், மன வருத்தம் அளிப்பதாக இருந்தால் அவற்றைப் பார்ப்பதையோ, கேட்பதையோ குறைத்துக்கொள்ளுங்கள். இதன்மூலம் கவலையையும், பதற்றத்தையும் கட்டுப்படுத்தலாம். இவை எல்லாம் உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாகக் கூறியிருப்பவை.
அரட்டையடியுங்கள்
உள்ளூர்ச் சூழலுக்கு ஏற்ப சொல்வதென்றால், உடனுள்ள குடும்பத்தினரிடமும், போன் வாயிலாக நண்பர்களுடனும் அரட்டையடியுங்கள். வீட்டுக்குள்தானே இருக்கிறோம் என்று கண்டதையும் சாப்பிடாமல், தேவைக்கேற்ப உண்டு, உடற்பயிற்சி செய்வதும், போதுமான அளவு தூங்குவதும் நல்லது. நோயின் தீவிரம் பற்றி அறிய பத்திரிகைகளையும், உலக சுகாதார நிறுவனத்தின் இணைய தளத்தையும் பார்க்கலாம். வாட்ஸ்அப் புரளிகளை நம்பவே வேண்டாம். உலகம் முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டிருப்பதால், மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் நம்மை நாமே மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்க முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.